விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு 200 கிலோ கொழுக்கட்டை மாவு ஏற்றுமதி

பீளமேடு: விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோவையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு  200 கிலோ கொழுக்கட்டை மாவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. உலகமும் முழுவதும் இந்தியர்கள் அதிலும் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழ்கிறார்கள். தமிழகத்தில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளின் போது சிறப்பு உணவு பொருட்கள் அங்கு கிடைக்காது. அவை இங்கிருந்து விமானத்தில் அனுப்பப்படுவது வழக்கம். பொங்கல் பண்டிகையின் போது வளைகுடா நாடுகளில் உள்ள தமிழர்களுக்கு கரும்பு கிடைக்காது. அவர்களுக்காக கோவையிலிருந்து சார்ஜா செல்லும் விமானத்தில் கரும்பு ஏற்றுமதி செய்வது வழக்கம்.

அதைப்போல வருகிற 19ம் தேதி (வெள்ளி) கிருஷ்ணஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சார்ஜாவில் உள்ளவர்களுக்காக கோவையிலிருந்து செல்லும் ஏர் அரேபியா விமானத்தில் கடந்த சில நாட்களாக முறுக்கு, சீடை, அதிரசம், முறுக்கு மாவு போன்றவை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

விநாயகர் சதுர்த்தி வருகிற 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவையிலிருந்து 200 கிலோ கொழுக்கட்டை மாவு இன்னும் ஒரு சில நாட்களில் சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறியதாவது: கோவையிலிருந்து சார்ஜாவுக்கு செவ்வாய் தவிர வாரத்தில் 6 நாட்கள் ஏர் அரேபியா விமானம் இயக்கப்படுகிறது. இதில் பயணிகள் அதிக அளவில் செல்வதால் ஒவ்வொரு முறையும் 2 டன் சரக்குகள் தான் அனுப்பப்படுகின்றன. தற்போது கிருஷ்ணஜெயந்தி போன்ற விழாக்காலம் என்பதால் சார்ஜாவில் உள்ள கடைக்காரர்கள் இங்கிருந்து சீடை, முறுக்கு, அதிரசம், முறுக்கு மாவு ஆகியவற்றை இறக்குமதி செய்கிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 300 கிலோ அனுப்பப்பட்டுள்ளன. இத்தகைய உணவு பொருட்கள் வழக்கம்போல அனுப்பப்படும் என்பதாலும் இந்த ஆண்டு சற்று அதிகரித்துள்ளது.

இதேபோல கோவையிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் உள்ள கடைகளுக்கு கொழுக்கட்டை மாவு 200 கிலோ அனுப்ப புக்கிங் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு நேரடி விமானம் இல்லை என்பதால் கோவையிலிருந்து சிங்கப்பூர் செல்லும் விமானத்தில் அனுப்பப்பட்டு அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் மற்றொரு விமானத்தில் கொழுக்கட்டை மாவு அனுப்பப்படுகிறது.

வெளிநாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்ப வேண்டுமென்றால் அதற்கான சான்றிதழ் அவசியம். அந்த உணவு பொருளை சாப்பிட்டால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படாது என்பதை சோதித்து பார்த்த பின்னர் தான் ஏற்றுமதி செய்ய முடியும்.

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்பும்போது அந்த நாட்டு அங்கீகாரம் பெற்ற உணவு சோதனை குழுவினர் அதை பரிசோதித்து பார்த்து சான்றிதழ் கொடுத்த பின்னர் தான் அனுப்ப முடியும்.

அதைப்போலத்தான் கொழுக்கட்டை மாவும் சான்றிதழ் பெற்று அனுப்பப்படுகிறது. சார்ஜாவுக்கு அனுப்பும் உணவு பொருட்களுக்கு ஒன்றிய அரசின் சான்றிதழ் போதுமானது என தெரிவித்தனர்.

Related Stories: