வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீருதவித் தொகை உடனடியாக வழங்கப்பட வேண்டும்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவு

சென்னை: வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக தீருதவித் தொகை அரசால் வழங்கப்பட வேண்டும் என்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்பு விதிகள் 1995, 12 (4)   வலியுறுத்துகிறது. 1. வழக்கு பதிவு செய்யப்படுதல், 2. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுதல், 3. எதிர்/ எதிரிகள் தண்டிக்கப்படுதல் என மூன்று கட்டங்களாகப் பிரித்து, ஒவ்வொரு காலகட்டத்திற்கும் எத்தனை சதவிகிதம் தீருதவித் தொகை வழங்கப்பட வேண்டும் என்றும், எத்தனை நாட்களுக்குள் அவை வழங்கப்பட வேண்டும் என்றும் மேற்படி விதிமுறைகளின் பட்டியல் இணைப்பு ஒன்றில் தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இச்சட்ட விதியை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் மாவட்ட காவல் துறை மற்றும் நிர்வாகத் துறை அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம் உக்கரம் காளி குளம், அண்ணா நகர் காலனியைச் சேர்ந்த திரு. ப. பெரியகாளையன் என்பவர் அக்கிராமத்தில் இருக்கும் மேட்டுக்கடையில் உள்ள உணவகத்தில் சாப்பிடச் சென்றபோது பட்டியல் சாதியை சார்ந்தவர்கள் பெஞ்சில் உட்கார்ந்து சாப்பிடக்கூடாது தரையில் அமர்ந்துதான் சாப்பிட வேண்டும் என்று கடையின் உரிமையாளர் கூறியதை எதிர்த்துக் கேட்டதற்காக, அவரை சாதியைச் சொல்லி இழிவாகப் பேசி அவமரியாதை செய்துள்ளனர்.

 

இது தொடர்பாக, பெரியகாளையன் 20.03.2022 அன்று கடத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, அது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்காகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் ஆதிக்க சாதியைச் சார்ந்தவர்கள் சுமார் 500 பேர் திரண்டு அரசூர் - கோபி பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டம் செய்து பட்டியல் சாதியினர் தங்களுக்கு அடங்கிப் போகவில்லை எனில் வன்முறை வெடிக்கும் என்றும் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தவர்களைக் கண்டதும் தாக்க வேண்டும் என்றும் பேசியுள்ளனர்.

இச்சூழலில், பெரியகாளையன் தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து, சாதி வெறியைத் தூண்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் 26.03.2022 அன்று புகார் அளித்திருந்தார். புகாரை விசாரித்த ஆணையம், 06.04.2022 அன்று இப்புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கை ஒன்றினை கோபிச்செட்டிப்பாளையம் உட்கோட்ட காவல் துறை துணைக் கண்காணிப்பாளரிடமும், பாதிக்கப்பட்ட மனுதாரருக்கு வழங்கப்பட்ட தீருதவித் தொகை தொடர்பான அறிக்கையை ஈரோடு மாவட்ட ஆட்சியரிடமும் கேட்டிருந்தது.

ஆனால், காவல் துறை துணைக் கண்காணிப்பாளரின் அறிக்கை தற்பொழுது வரை வரவில்லை. ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் 30.06.2022 அன்று தமது அறிக்கையை அனுப்பியிருந்தார். அவ்வறிக்கையில், மனுதாரர் பெரியகாளையன் என்பவர் அளித்த புகாரைக் கொண்டு வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடத்தூர் காவல் நிலைய எனண் 67/2022 இன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டது என்றும் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தீருதவித் தொகை ரூ.62,500 வழங்க பரிந்துரை செய்து முன்மொழிவு தமக்கு வரப்பெற்றுள்ளது என்றும், மேற்படி தீருதவித் தொகை வழங்க 2022 - 2023 - க்கான நிதி ஒதுக்கீடு அரசிடம் கோரப்பட்டுள்ளது என்றும்,  எனவே மனுதாரர் பெரியகாளையன் என்பவருக்கு தீருதவித் தொகை வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என்றும் மேற்படி நிதி ஒதுக்கீடு வரப்பெற்றவுடன் தீருதவித் தொகை வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

மேற்படி அறிக்கையில் இருந்து முதல் தவணை தீருதவித் தொகை பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படவில்லை என்பதைக் கண்டறிந்த ஆணையம் விதிமுறைப்படி செலுத்தப்பட வேண்டிய முதல் தவணை தீருதவித் தொகையை மேலும் காலதாமதம் செய்யாமல் வழங்கிவிட்டு, விதிமுறையில் சொல்லப்பட்டுள்ள கட்டளை நிறைவேற்றப்பட்டதற்கான அறிக்கையினை 12.08.2022 - க்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தியிருந்தது. அந்தத் தேதிக்குள் ஆணை செயல்படுத்தப்பட்டதற்கான அறிக்கை எதுவும் மாவட்ட ஆட்சியரிடம் இருந்து பெறப்படவில்லை.

மாவட்ட ஆட்சியர் தமது 30.06.2022 தேதியிட்ட அறிக்கையுடன் ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், 16.05.2022 அன்று சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு எழுதியிருந்த கடிதத்தின் நகல் ஒன்றையும் இணைத்து அனுப்பி இருந்தார்.

அக்கடிதத்தில் ஈரோடு மாவட்டத்தில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் 1989 இன் கீழ் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு தீருதவித் தொகை வழங்க பிப்ரவரி 2022 முதல் மே 2022 வரை 30 நபர்களுக்கு மொத்தம் 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடமிருந்து  17 முன்மொழிவுகள் பரிந்துரை செய்து வரப் பெற்றுள்ளன என்று குறிப்பிட்டு, அந்த 17 பெயர்கள் அடங்கிய பட்டியல் ஒன்றை இணைத்துள்ளார்.

அதில் 17-வது பெயராக மாதையன் வாரிசுகள் எட்டு பேர் என்ற பெயருக்கு முன்னால் முன்மொழிவு வரப்பெற்ற தேதி 20.05.2022 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மே 16 ஆம் தேதி எழுதப்பட்ட கடிதத்தில் மே 20 ஆம் தேதி முன்மொழியப்பட்ட பெயர் எப்படி இடம் பெற முடியும் என்பது விளங்கவில்லை. இது, இவ்வறிக்கையின் நம்பகமற்ற தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டுத் தொகையை உடனே தராமல், பல்வேறு வழக்குகள் சேரும் வரை காத்திருந்து விட்டு, அதற்குப் பிறகு நிதிப் பற்றாக்குறையைக் காரணமாகச் சொல்லி சட்டத்தின் விதிமுறைகள் புறந்தள்ளப்படுவதை ஏற்க முடியாது. ஆதிதிராவிடர் நல ஆணையரகத்திற்கு எழுதப்பட்டுள்ள 16.05.2022 தேதியிட்ட கடிதத்தில்கூட, 20.05.2022 - க்குப் பிறகு எதிர்பார்க்கப்படும் வழக்குகளுக்கான தீருதவித் தொகை கோரப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது.எனவே, ஈரோடு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, சென்னை சேப்பாக்கத்தில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நல ஆணையரகத்தின் ஆணையருக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு தீருதவித் தொகை வழங்கப்படாமல்  நிலுவையில் இருக்கும் வழக்குகளில் மட்டுமின்றி, 2022 - 2023 நிதி ஆண்டுக்கான எதிர்நோக்கு தீருதவி நிதியையும் எவ்விதத் தாமதமும் இன்றி ஆதிதிராவிடர் நல ஆணையரகம் உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: