எழுத்து அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவல்களுக்கான பரிசு தொகை ரூ.2 லட்சமாக உயர்வு; நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவிப்பு

சென்னை: எழுத்து அமைப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த நாவல்களுக்கான பரிசு தொகையை ரூ.2லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று அந்த அமைப்பின் நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். தமிழ் இலக்கியத் தளத்தில் புதுமைகளை மிளிரச் செய்யவும், தமிழ் இலக்கியம் மேன்மையுறத் தொண்டாற்றவும் ”எழுத்து’ என்ற இலக்கிய அமைப்பை காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தொடங்கி நடத்தி வருகிறார். செம்மொழி மத்திய தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவர் அவ்வை நடராசன், கவிஞர்கள் வைரமுத்து, மு.மேத்தா, மரபின் மைந்தன் முத்தையா, ப.சிதம்பரம் ஆகியோர் எழுத்து அமைப்பின் அறங்காவலர்களாக உள்ளனர். தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் எழுத்து தமிழிலக்கிய அமைப்பு செயல்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் நாவல் போட்டிகளை நடத்தி ரூ.ஒரு லட்சம் பரிசு வழங்கி வருகிறது. தற்போது அந்த பரிசுத் தொகையை ரூ.2 லட்சமாக உயர்த்தி ப.சிதம்பரம் அறிவித்துள்ளார். இதுகுறித்து, எழுத்து அமைப்புக்காக கவிஞர் இலக்கிய நடராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘ எழுத்து தமிழிலக்கிய அமைப்பு ஆண்டு தோறும் நாவல் போட்டிகளை நடத்தி தேர்வு பெறும் சிறந்த நாவலுக்கு ரூ. ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கி வருகிறது. தமிழ் எழுத்தாளர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் தற்போது வழங்கப்படும் பரிசுத் தொகையான ரூ.ஒரு லட்சம் என்பது, 2021ம் ஆண்டுக்கான போட்டிகளிலிருந்து ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கப்படுவதாக எழுத்து அமைப்பின் நிறுவன தலைவர் ப.சிதம்பரம் அறிவித்துள்ளார்” என்று கூறியுள்ளார்.

Related Stories: