பூந்தமல்லியில் சொந்த வீட்டில் 550 பவுன் திருடிய விவகாரம்; தொழிலதிபர், மாடல் அழகியை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

பூந்தமல்லி: பூந்தமல்லியில் தனது காதலிக்காக வீட்டில் திருடிய 550 பவுன் நகைகளை பரிசாக வழங்கிய வழக்கு தொடர்பாக, தொழிலதிபரையும் மாடல் அழகியையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர். பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் சேகர் (47). இவர், பேருந்து நிலையம் அருகே இனிப்பு கடை மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக தனது சொந்த வீட்டிலேயே தனது மனைவி, தாயார் மற்றும் தம்பி மனைவி ஆகியோருக்கு சொந்தமான 550 பவுன் நகைகளை திருடி தனது காதலியும் மாடல் அழகியுமான சுவாதி (22) என்ற பெண்ணுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.

மேலும், ₹30 லட்சம் ரொக்கப் பணம், சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த பைக்கையும் சேகர் வாங்கி கொடுத்திருக்கிறார். இதுகுறித்து கடந்த ஒரு வாரத்துக்கும் முன்பு சேகரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து பூந்தமல்லி போலீசில் புகார் அளித்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகர் மற்றும் சுவாதி ஆகிய இருவரையும் கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், தனக்கு எந்த நகைகளையும் சேகர் கொடுக்கவில்லை என சுவாதி மறுப்பு கூறியதாக தெரியவந்தது. பின்னர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதைத் தொடர்ந்து, சுவாதியிடம் இருந்து நகைகளை மீட்பதற்காகவும், இதன் பின்னணி காரணங்கள் குறித்து தீவிரமாக விசாரிக்க இருவரையும் காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிபதி, நேற்று மாலை சுவாதியை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்கவும், சேகரை 3 நாள் காவலில் விசாரிக்க உத்தரவிட்டு அனுமதியளித்தார். இந்நிலையில், நேற்றிரவு முதல் சேகர், சுவாதி ஆகிய இருவரையும் ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து சுவாதி விசாரிக்கப்பட்டு வருகிறார். உண்மையிலேயே சுவாதிக்கு 550 பவுன் நகைகளை சேகர் கொடுத்துள்ளாரா, அந்த நகைகளை சுவாதி எங்கு பதுக்கி வைத்துள்ளார் அல்லது விற்பனை செய்துவிட்டாரா என பல்வேறு கோணங்களில் இருவரிடமும் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: