ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்; இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர்

சென்னை: உயர் நீதிமன்ற தீர்ப்பையொட்டி ஓபிஎஸ் ஆதரவாளர்கள் சென்னையில் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இபிஎஸ் அணியினர் சோகத்தில் மூழ்கினர். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்னையால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுகவின் பொதுக்குழுவில் உள்ள பெரும்பாலான ஆதரவாளர்களை திரட்டி, எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம் 11ம் தேதி அதிமுக பொதுக்குழுவை கூட்டினார். இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் நீதிமன்றம் சென்றார். “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், எனது அனுமதி இல்லாமல் அதிமுக பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அங்கீகரிக்க கூடாது” என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பில், “அதிமுகவில் ஜூன் 23ம் தேதிக்கு முன் இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் (ஓ.பன்னீர்செல்வம்), இணை ஒருங்கிணைப்பாளர் (எடப்பாடி பழனிசாமி) ஆகியோர் இணைந்துதான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். அதனால் கடந்த மாதம் 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு செல்லாது” என்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதியின் தீர்ப்பை கேட்டு, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தீர்ப்பு வருவதற்கு முன்பே, சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டில் மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, ஜெ.சி.டி.பிரபாகர் மற்றும் ஆதரவாளர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர். தீர்ப்பு ஓபிஎஸ் அணியினருக்கு சாதகமாக வந்ததையொட்டி, பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், நடனம் ஆடியும் கொண்டாடினர். அதேபோன்று சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த தீர்ப்பை கொண்டாடி மகிழ்ந்தனர். அதேநேரம் சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீடு அமைந்துள்ள பகுதியில் முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் இன்று காலை 9 மணி முதலே திரண்டு இருந்தனர்.

ஆனால் காலை 11.30 மணிக்கு தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு சாதகமாக வராததால் சோகத்தில் மூழ்கினர். எப்படியும் தங்களுக்கு சாதகமாக வரும் என்று, பட்டாசு, இனிப்புகளுடன் தயார் நிலையில் இருந்த இபிஎஸ் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனர். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அதிமுக பொதுக்குழு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு இறுதியானது கிடையாது. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி முடிவு செய்வார்கள்” என்றார்.

Related Stories: