இரிடியம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: 10 பேருக்கு போலீஸ் வலைவீச்சு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் இரிடியம் வாங்குவதாக கூறி 4.5 கோடி கடன் வாங்கி கட்டியவர் ஏமாற்றப்பட்ட நிலையில் கடன் தொல்லையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரது இறப்பிற்கு காவல் துறை தான் காரணம் என கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மானாமதுரை ஆனந்த வள்ளி நகரை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. இவர் அதே மானாமதுரை, சிவகங்கை, பரமக்குடி ஆகிய பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகின்றார். இவருக்கு தேனி மாவட்டம்,போடி அருகேவுள்ள பொட்டல்களம் கிராமத்தை சேர்ந்த கவுர் மோகன்தாசிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அவர் தன்னிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை ராஜீவ் காந்திக்கு விற்பனை செய்வதாக கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து தனது உறவினர்கள் நண்பர்களிடம்  சுமார் ரூ4.5 கோடி பணத்தை கடனாக பெற்ற ராஜீவ் காந்தி அந்த பணத்தை கவுர் மோகன் தாசிடம் வழங்கியுள்ளார்.அந்த பணத்தை பெற்றுக்கொண்டு பொருளையும் வழங்காமல் பணத்தையும் வழங்காமல் கவுர் மோகன் தாஸ் இழுத்தடித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனிடையே ராஜிவ்காந்தி தனது நண்பர்களுடன் சேர்ந்து கவுர் மோகன்தாசை அவரது சொந்த ஊரில் இருந்து கடத்தி வந்து பணத்தை கேட்டுள்ளார்.

இது குறித்து கவுர் மோகன் தாசின் மனைவி போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையில் தேனி மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து கவுர் மோகன்தாசை மீட்டு சென்ற நிலையில், ராஜீவ் காந்தி மனஉளைச்சலில் இருந்ததாக கூறப்படுகின்றது. இதனையடுத்து ராஜிவ் காந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில் இழந்த பணத்தை மீட்டு தரக்கோரி சிவகங்கை  குற்றபிரிவில்  ராஜீவ் காந்தி புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவில்லை என உறவினர்கள் சிவகங்கை அம்பேத்கார் சிலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த ஏ.டி.எஸ்.பி அன்பு தலைமையிலான காவல்துறையினர் உறவினர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

 சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் வழக்கு பதிவு செய்யவேண்டும். மேலும் 4.5 கோடி பணத்தை மீட்டு தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். நடவடிக்கைகள் எடுப்பதாக போலிசார் உறுதியளித்ததின் பேரில் அதனை தொடர்ந்து அனைவரும் கலைந்துசென்றனர்.

Related Stories: