தர்மபுரி வன மண்டலத்தில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க ₹138 கோடியில் அகழி, மின்வேலி: அரசுக்கு கருத்துரு அனுப்பி வைப்பு

தர்மபுரி: யானை மற்றும் வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க, தர்மபுரி மண்டலத்தில் சோலார் மின்வேலி, யானை தாண்டா அகழி அமைக்க ₹138 கோடியில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒன்றாக இணைக்கும் பகுதியாக, தர்மபுரி மண்டல வனப்பகுதி இருந்து வருகிறது. 3 ஆயிரத்து 245.17 கிலோ மீட்டர் சுற்றளவில் வனப்பகுதி உள்ளது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற மாநிலத்தை இணைக்கும் ஒருங்கிணைந்த வனப்பகுதியாக, தர்மபுரி மண்டலம் உள்ளது. தர்மபுரி மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் வனக்கோட்டம் உள்ளது. இவ்வனப்பகுதிகளில் யானை மற்றும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் உள்ளது. குறிப்பாக ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் ஆகிய வனச்சரக பகுதியில் யானை மற்றும் வன விலங்குகள் அதிகம் நடமாடும் பகுதியாக இருந்து வருகிறது. இந்த வனப்பகுதியை ஒட்டி 100க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. மேலும்  தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே (தண்டவாளம்) பாதை செல்கின்றன. வனவிலங்குகள் ரயில் தண்டவாளம் மற்றும் தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது, எதிர்பாரத விதமாக வாகனங்கள் மோதி இறக்கும் சம்பவம் நடக்கிறது.

இவ்வாறு ஆண்டுந்தோறும் ஏதாவது ஒரு விபத்தில், வனவிலங்குகள் இறந்துகொண்டே இருக்கின்றன. கெலமங்கலம் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பு, ரயில் மோதி 4 யானைகள் இறந்தன. அதேபோல், சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறுத்தை புலி வாகனம் மோதி இறந்து கிடந்தது. அதுபோன்று மான்களும் வாகனம் மோதி இறக்கின்றன. இதை தவிர்க்க தர்மபுரி மண்டல வனத்துறை சார்பில், சோலார் மின்வேலி, யானை தாண்டா அகழி, கிரானைட் கல் தடுப்பு சுவர், நவீனவகையான இரும்புவட கம்பி வேலி, சூரிய சக்தியில் இயங்கும் இரும்பு வட கம்பி வேலி, தொங்கும் வகையிலான சூரிய மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி வனக்கோட்டத்தில் கடந்த 2011-2012ம் ஆண்டு முதல் இதுவரை, தர்மபுரி வனக்கோட்டத்தில் பல்வேறு திட்டத்தின் கீழ் ₹5.90 கோடி செலவில், 173 கிலோ மீட்டர் தொலைவிற்கு யானை தாண்டா அகழியும், ₹4 லட்சம் செலவில் 2 கிலோ மீட்டர் தொலைவில் சூரிய சக்தி மின்வேலி அமைக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டத்தில், யானை தாண்டா அகழி ₹9.67 கோடியில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. ₹2.13 கோடியில் சூரிய சக்தி மின்வேலி, 127 கிலோ மீட்டர் தூரத்திற்கும், ₹80 லட்சம் மதிப்பீட்டில் கிரானைட் கல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

₹3.10 கோடி மதிப்பீட்டில் நவீன வகையிலான இரும்பு வட கம்பி வேலி 17 கிலோ மீட்டர் தூரமும், ₹1.08 கோடி மதிப்பீட்டில் சூரிய சக்தியில் இயங்கும் இரும்புவட கம்பி வேலி 24 கிலோ மீட்டர் தூரமும், ₹29.35 லட்சம் மதிப்பீட்டில் தொங்கும் வகையிலான, சூரிய மின்வேலி 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் வனக்கோட்டத்தில் மட்டும் ₹16 கோடியில் 498 கிலோ மீட்டர் தூரத்திற்கு மனித விலங்கு மோதலை தடுக்க இத்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தர்மபுரி, ஓசூர் வனக்கோட்டத்தில் மட்டும், இதுவரை ₹21.94 கோடி மதிப்பீட்டில் 673 கிலோ மீட்டர் தொலைவிற்கு வனவிலங்குகள் ஊருக்குள் வராமல் இருக்க பாதுகாப்பு வேலி, அகழி, தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தர்மபுரி மண்டலத்தில் தர்மபுரி, ஓசூர் 2 வனக்கோட்டம் உள்ளது. இந்த வனக்கோட்டத்தில் யானை நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஓசூர் வனக்கோட்டத்தில் யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளன. 300க்கும் மேற்பட்ட யானைகள் தர்மபுரி மண்டலத்தில் உள்ளன.

யானைகள் தொடர்ந்து ஒரு இடத்தில் இருக்காது, இடம்விட்டு இடம் சென்றுக்கொண்டே இருக்கும். இவ்வாறு செல்லும்போது வனப்பகுதியை ஒட்டியுள்ள  விளைநிலங்களில் இறங்கிவிடுகின்றன. மேலும் மனிதன் யானை நடமாட்டம் உள்ள பகுதியை அழித்து, விளை நிலமாக்குகிறான். இதனால் வழிதவறி யானைகள் ஊருக்குள் சென்று விடுகிறது. இதை தவிர்க்கவே சோலார் மின்வேலி, யானை தாண்டா அகழி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் புதியதாக அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல், பென்னாகரம், பாலக்கோடு, தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஜவளகிரி, அஞ்செட்டி, உரிகம் போன்ற பகுதியில் ₹138 கோடியில் வனவிலங்கு மேம்பாடு மற்றும் மனித விலங்கு மோதலை தடுக்கும்பணிக்கு, அரசு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தர்மபுரி வனக்கோட்டத்தில் ₹33 கோடியும், ஓசூர் வனக்கோட்டத்திற்கு ₹105 கோடியும் கேட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

Related Stories: