நீர்வரத்து 3200 கன அடியாக சரிவு பவானிசாகர் அணையிலிருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தம்: கரையோர மக்கள் நிம்மதி

சத்தியமங்கலம்:  பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் அணையில் இருந்து பவானி ஆற்றில் திறக்கப்பட்ட உபரி நீர் நிறுத்தப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் கடந்த ஜூலை மாத தொடக்கத்தில் 83 அடியாக இருந்தது. இந்த நிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இதைத்தொடர்ந்து அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி 102 அடியை எட்டியது. இதைத்தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி அணைக்கு உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.

 அதிகபட்சமாக 25 ஆயிரம் கன அடி வரை உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 12 ஆம் தேதி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது. இதன் காரணமாக பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றின் மேல் மதகுகள் மூலம் திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 3,200 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக கீழ்பவானி வாய்க்காலில் 2000 கன அடி தண்ணீரும், பவானி ஆற்றில் 1000 கன அடி தண்ணீரும் என மொத்தம் 3000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 102 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் நேற்று அதிகாலை வரை பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தொடர்ந்து 11 நாட்கள் உபரி திறக்கப்பட்ட நிலையில் 10 டிஎம்சி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்பட்டதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணையில் இருந்து உபரி நீர் திறப்பு நிறுத்தப்பட்டதால் பவானி ஆற்றங்கரை ஓரம் வசிக்கும் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Related Stories: