கடந்த ஒன்றரை ஆண்டில் குமரியில் விபத்தில் 199 சிறுவர்கள் பலி: 2,128 பேர் படுகாயம்

நாகர்கோவில்:  குமரியில் 20 மாதங்களில் நடந்த விபத்துக்களில் 199 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2,128 பேர் கை, கால்களை இழந்து படுகாயம் அடைந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னையை விட, காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது விபத்துக்களும், அதனால் நிகழும் மரணங்களும் தான் என்றால் மிகையாகாது. கொலை, கொள்ளை சம்பவங்களை கூட ரோந்து பணிகள், குற்றவாளிகள் கைது ஆகியவற்றின் மூலம் கட்டுப்படுத்திட முடியும். ஆனால் விபத்து மரணங்கள் என்பது மிகவும் கட்டுப்பாடற்ற வேகத்தில் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. காவல்துறை நாள்தோறும் மணிக்கணக்கில் நின்று வாகன சோதனை நடத்தி வழக்குகள், அபராதம் என நடவடிக்கை மேற்கொண்டாலும், விபத்துக்கள் குறைந்தபாடில்லை. நாள்தோறும் அதிக எண்ணிக்கையில் விபத்துக்களும், மரணங்களும் நிகழும் மாவட்டங்களில் குமரி மாவட்டமும் ஒன்றாகி உள்ளது. அதி வேகம் ஆபத்து, தலைக்கவசம் உயிர் கவசம் என பல்வேறு விழிப்புணர்வுகளை  மாவட்ட நிர்வாகம், காவல்துறை மேற்கொண்டாலும் கூட வாகன ஓட்டிகள் இதை கண்டு கொள்வது இல்லை. குறிப்பாக இளைஞர்கள் இந்த அறிவுரைகளை உதாசினப்படுத்துகிறார்கள். விளைவு விபத்துக்களில் சிக்கி பலியாகி விடுகிறார்கள்.

சமீபத்தில் கூட இரணியல் மற்றும் கொட்டாரத்தில் அடுத்தடுத்த நாட்களில் நடந்த பைக் விபத்துக்களில் மொத்தம் 4 பேர் உயிரிழந்தனர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தாலும் சரி, படுகாயம் அடைந்து கை, கால்களை இழந்தாலும் சரி அவரின் குடும்பம் ஒரு வேளை சோற்றுக்கே கைகேந்தும் பரிதாப நிலைக்கு வந்து விடுகிறது. விபத்தில் கணவரை இழந்த இளம்பெண்கள், தந்தையை இழந்த குழந்தைகள், மகனை பறி கொடுத்த பெற்றோர் தவிக்கும் தவிப்புகள் வார்த்தைகளால் சொல்ல முடியாதது. விபத்துக்களில் பலியாகிறவர்களில் இளம் வயதினர் மிக அதிகம் என்பது மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களின் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கடந்த 2021 ல் மட்டும் உயிரிழந்த 321 பேரில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 161 பேர் ஆவர். இதே போல் இந்த ஆண்டு இதுவரை பலியாகி உள்ள 175 பேரில், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் 38 பேர் ஆவர். இவர்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அடங்குவர் என்பது வேதனை அளிக்கும் விஷயமாகும். கடந்த 2021 ல் மட்டும் காயம் அடைந்தவர்கள் 1198 பேர் ஆவர். இந்த ஆண்டு இதுவரை 930 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

பெரும்பாலான விபத்துக்களுக்கு போதை தான் காரணமாக அமைந்திருக்கிறது. இது தவிர ஓவர்டேக்கிங் மூலமும் அதிக விபத்து மரணங்கள் நிகழ்ந்துள்ளன. விபத்தில் காயம் அடைந்து கை, கால் முறிந்து, முதுகெலும்பு பாதிக்கப்பட்டும் நடை பிணமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களிள் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. விபத்துக்களை கட்டுப்படுத்த காவல்துறை மட்டும் நினைத்தால் முடியாது. வாகன ஓட்டிகள், பெற்றோர், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் இது பற்றி சிந்திக்க வேண்டும். வாகன வேகம், வாழ்க்கையை சிதைத்து விடும் என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்த உணர்வுடன் வாகனத்தில் ஏறி அமர்ந்து இயக்கும் போது தான் விபத்து மரணங்களை கட்டுப்படுத்த முடியும்.குறிப்பாக கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் அதிக வேகம் ஆபத்து என்பதை உணர்த்த வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு இருக்கிறது. பிள்ளைகள் ஆசைக்காக அதிக இன்ஜின் திறன் கொண்ட வாகனங்களை வாங்கி கொடுத்து அழகு பார்க்க நினைத்த பல பெற்றோர், இன்று அவர்களின் குழந்தைகளின் கல்லறைக்கு மலர் வளையம் வைக்க வேண்டிய துர்பாக்கிய நிலை உள்ளது. எனவே இந்த நிலை மாற போதிய விழிப்புணர்வுடன், சமூக பொறுப்பும் அனைவருக்கும் வர வேண்டும்.

20 மாதங்களில் 496 பேர் பலி

கடந்த 2021 ல் 1225 விபத்துக்களில் 321 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 18  ஆண்டுகளில் இல்லாத வகையில் 2021 ல் தான் அதிக விபத்து மரணம்  நிகழ்ந்துள்ளது. கடந்த 2021 ல் 1,198 பேர் படுகாயம்  அடைந்துள்ளனர். இந்த ஆண்டு இதுவரை நடந்த 815 விபத்துக்களில் 935 பேர்  படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் 175 பேர். இந்த ஆண்டு மே மாதம் வரை சுமார் 92 பேர் தான் பலியாகி  இருந்தனர். ஆனால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் 13 வரை நடந்த விபத்துக்களில் 80 பேர்  உயிரிழந்துள்ளனர்.  74 நாட்களில், 80 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

களத்துக்கே வந்த எஸ்.பி.

விபத்துக்களை தடுக்கும் வகையில் காவல்துறை சார்பில் தற்போது பல்வேறு  விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்ெகாள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக  எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் பொறுப்பேற்ற பின் விபத்துக்களை குறைக்க அவரே நேரடியாக விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறார். சாலையில் நின்று வாகன சோதனை நடத்துவதுடன், ஹெல்மெட் அவசியத்தை மக்களுக்கு அவர் நேரடியாக விளக்கி வருகிறார். பள்ளி, கல்லூரிகளுக்கு இது தொடர்பாக கடிதம்  அனுப்பி உள்ளார். சாலை விதிகளை மாணவ, மாணவிகள் கடைபிடிக்கும் வகையில்  பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என எஸ்.பி.  கேட்டுக் கொண்டுள்ளார். காவல்துறை சார்பில் குறும்படங்களும்  வெளியிடப்பட்டு வருகின்றன.

Related Stories: