பரமக்குடி நாற்றாங்கால் பண்ணையில் 20 லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்துக்கு வழங்கி சாதனை

பரமக்குடி: தமிழகத்தில் வன வளத்தினை அதிகரிக்கவும், உயிர்ப் பன்மையினைப் பாதுகாத்திடவும் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மேலும், தமிழகத்தின் இயற்கை வளத்தைப் பேணி பாதுகாக்க, ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது. சூழலியல் சமன்பாட்டினை நிலைநிறுத்தவும், வனம் மற்றும் மரங்களின் பரப்பை அதிகரித்து, தமிழகத்தின் பசுமைப் போர்வையை மேம்படுத்தும் உன்னத நோக்குடன், வனப்பகுதிகளில் மட்டுமின்றி, வனத்திற்கு வெளியே இருக்கும் காலியிடங்களில் அதிக எண்ணிக்கையில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி ஒன்றியம் வேந்தோனி மற்றும் உரப்புளி ஆகிய கிராம ஊராட்சிகளில் பசுமை ஏற்படுத்துதல் திட்டத்தின் கீழ் ரூ.4,90,000 மதிப்பில் நாற்றங்கால் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.நாற்றங்கால் பண்ணை செயல் படுத்தப்பட்டு மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் நாற்றாங்கால் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கின்றனர். நாற்றாங்காலில் பூவரசு, சவுக்கு, சில்வர் ஒக், சிறு தேக்கு, மலைநெல்லி, எலுமிச்சை, கொய்யா, புங்கன், சீத்தாபழம், மாதுளை, வில்வம், குமிழ், சிறிய நெல்லி, கற்பூரம், மேபிளவர், அரளி, செம்பருத்தி, மாங்கனி, நாவல் உள்ளிட்ட பல செடிகள் மற்றும் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

இவை வீரிய ஒட்டு ரகங்கள் என்பதால் விரைவாக வளர்ந்து பலன் தருகின்றன. இப்பண்ணைகளில் தற்போது தலா 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு தயாராக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அனைத்து நாற்றாங்கால்களையும் மாவட்டத்தின் அனைத்து ஊராட்சி பகுதிகளில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு கடந்தாண்டு 8 லட்சம் மரகன்றுகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு 2.5 லட்சம் மரக்கன்றுகள் கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.இது குறித்து பிடிஓ சந்திரமேகன் கூறுகையில், கடந்த ஆண்டு 2 நாற்றாங்காலில் தலா 5 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி கிராமங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. அதைப் போன்று இந்தாண்டு இன்று நாற்றாங்காலில் இருந்து தலா 5 லட்சம் மரக்கன்றுகள் என 10 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு தற்போது 5 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் இன்னும் அதிகமான மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு வினியோகம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள குறுங்காடுகள் திட்டத்திற்கு பரமக்குடியின் இரண்டு நாற்றங்காலில் இருந்து மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருவதாக கூறினார்.வேந்தோனி ஊராட்சி தலைவர் குழந்தைராணி துரைராசு, பரமக்குடியில் உள்ள இந்த நாற்றாங்காலை பொதுமக்கள் பயன்படுத்தி மரக்கன்றுகளை பெற்று அதிக அளவிலான மரங்களை வளர்க்க முன்வரவேண்டும். ஊராட்சி தலைவர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான மரக்கன்றுகளை நாற்றங்கால் பண்ணையில் குறைந்த விலையில் வாங்கி மக்களுக்கு வழங்கி மரங்களை வளர்க்க ஊக்குவிக்க வேண்டும். மரங்களை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழலும், இயற்கை வளமும் பாதுகாக்கப்படும் என்றார்.

Related Stories: