இலவசம் குறித்த வழக்கில் திமுகவின் இடையீட்டு மனு ஏற்பு; அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை தடுக்க முடியாது.! உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

புதுடெல்லி: இலவசங்கள் குறித்து வழக்கில் திமுகவின் இடையீட்டு மனு ஏற்கப்பட்டது. இவ்வழக்கில் அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை தடுக்க முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார். உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ‘அரசியல் கட்சிகள் தேர்தல் நேரத்தில் இலவசங்கள் குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற இலவசங்களால் நாட்டின் நிதி ஆரோக்கியம் பாதிக்கிறது. தேர்தலுக்கு பின் வழங்கும் இலவசங்களை ஒழுங்குபடுத்தி, வரையறை செய்ய வேண்டும். விதிமுறைகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை முடக்கி, அக்கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் திமுகவையும் எதிர்மனுதாரராக சேர்க்கக் கோரி திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி உச்சநீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். அதில், ‘இலவச சேவைகளை அளிக்கும் நலத் திட்டங்களானது வாய்ப்புகள், வசதிகள், வருவாய், அந்தஸ்து ஆகியவற்றில் உள்ள சமத்துவமின்மையைக் குறைக்க அரசியலமைப்புச் சட்டத்தின் 38வது பிரிவின்கீழ் சமூக ஒழுங்கு, பொருளாதார நீதியைப் பாதுகாக்கும் நோக்குடன் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வாங்க முடியாத அடிப்படைத் தேவைகளை அளிக்கும் பொருட்டே, இதுபோன்ற திட்டங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

இலவசம் என்பது மிகவும் பரந்த விஷயமாகவும், பல்வேறு அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டியதாகவும் உள்ளது. மாநில அரசால் அறிமுகப்படுத்தப்படும் நலத் திட்டத்தை மட்டுமே இலவசமாக வகைப்படுத்தி நியாயமாக்க முடியாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ‘இந்தப் பொது நல வழக்கில் மனுதாரர், எதிர்மனுதாரராக ஒன்றிய அரசையும், தலைமை தேர்தல் ஆணையத்தையும் மட்டுமே சேர்த்துள்ளார். ஆனால், இந்த விவகாரத்தில் தொடர்புடைய எங்களைப் போன்ற அரசியல் கட்சிகளையும் எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கண்ட மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது  திமுக அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன், ‘எங்களது தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமூகவியல் விதிமுறைகளின்படி யாரையும் கட்டுப்படுத்த முடியாது’ என்றார்.

ஒன்றிய அரசின் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர், ‘சமூக நலன் சார்ந்த இலவச திட்டங்களை எதிர்க்கவில்லை. அனைத்தும் இலவசமாக வழங்குவதை எதிர்க்கிறோம்’ என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி என்.வி.ரமணா, ‘இடையீட்டு மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை தடுக்க முடியாது. இலவச திட்டங்களை வரைவுபடுத்த வேண்டும். இலவச கல்வி, சில குறிப்பிட்ட அளவில் மின்சாரம் வழங்குதலை இலவச அறிவிப்புகளாக கருத வேண்டுமா? இவ்விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்பதால், அனைத்து தரப்பினரும் தங்களது தரப்பு கருத்தை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். அதன்பின்னரே இறுதி முடிவு அறிவிக்கப்படும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் 22ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories: