அவசரம் என்றாலும்... அடக்கியே தீரவேண்டும் எந்த ரயில் இன்ஜினிலும் ‘அந்த’ வசதி இல்லை: இதிலும் புறக்கணிக்கப்படுகிறதா தெற்கு?

மதுரை: இந்தியா முழுவதும் ஓடும் ரயில் இன்ஜின்களில் 120 சரக்கு ரயில் இன்ஜின்களுக்கு மட்டும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இதில், தெற்கு ரயில்வேயில் ஒரு கழிவறை வசதியும் செய்து தரப்படாத அதிர்ச்சித் தகவல் ஆர்டிஐ மூலம் தெரியவந்துள்ளது.ரயில் இன்ஜினில் கழிவறை வசதிகள் தேவை என வலியுறுத்தி ரயில் ஓட்டுநர்கள் சமீபகாலமாக தொடர் கோரிக்கைகளுடன், போராட்டங்களும் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரயில் இன்ஜின்களில் உள்ள கழிவறை வசதிகள் குறித்து சமூக ஆர்வலர் பாண்டியராஜா ஆர்டிஐ மூலம் ரயில்வே அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார்.இதற்கு இந்திய ரயில்வே மின்சார பிரிவு இயக்குனர் அனுராக் அகர்வால் அளித்துள்ள பதிலில், ‘‘இந்தியா முழுவதும் 120 டபுள்யு ஏஜி 9 மின்சார இன்ஜின்களில் கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 120 ரயில் இன்ஜின்களில் ஆண், பெண் ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் வகையில் கழிவறை அமைக்கப்பட்டுள்ளது. கழிவறை வசதிகள் கொண்ட ரயில் இன்ஜின்களின் எண்ணிக்கை, மண்டலம் வாரியாக வருமாறு: மத்திய ரயில்வே 15, மேற்கு மத்திய ரயில்வே 16, கிழக்கு ரயில்வே 1, தென் கிழக்கு ரயில்வே 5, வடகிழக்கு எல்லை ரயில்வே 1, தென் கிழக்கு மத்திய ரயில்வே 26, தென் மத்திய ரயில்வே 27, கிழக்குக் கடற்கரை ரயில்வே 28, தென்மேற்கு ரயில்வே 1’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் தெற்கு ரயில்வேயில் இயங்கும் ரயில் இன்ஜின்களில் ஒன்றில் கூட கழிவறை வசதி செய்யப்படவில்லை. பல்வேறு சுத்தம் சுகாதாரங்களுக்காக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் ரயில்வே துறை, தன் சொந்த பணியாளர்களுக்கு சுகாதாரமான கழிவறை வசதிகள் செய்து கொடுக்காதது மிகுந்த அதிர்ச்சியைத் தந்துள்ளது. தேஜாஸ் போன்ற அதி விரைவு ரயில்கள் 300 கிமீ க்கும் மேல் நிற்காமல் செல்லும் இந்த நவீன யுகத்திலும் கழிவறை வசதிகள் இல்லாததால் ரயில் ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். குறிப்பாக பெண் ஓட்டுனர்களின் நிலைமை மிகவும் மோசம்.

இதுகுறித்து பாண்டியராஜா கூறும்போது, ‘‘ரயில்களின் இயக்கத்துக்கு உயிர்நாடியாக விளங்கும் ரயில் ஓட்டுனர்களுக்கு தெற்கு ரயில்வேயில் கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்காதது வருத்தமளிக்கிறது. இனியும் தாமதம் செய்யாமல் உடனடியாக தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் அனைத்து ரயில் இன்ஜின்களிலும் சுகாதாரமான கழிவறை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். குறிப்பாக நீண்ட தூரம் நிற்காமல் செல்லும் சென்னை - மதுரை தேஜாஸ் ரயிலுக்கு உடனடியாக ஏற்படுத்த வேண்டும். அனைத்து ரயில் இன்ஜின்களிலும் கழிவறை வசதிகள் ஏற்படுத்தும் வரை ரயில் இன்ஜினுக்கு அடுத்ததாக உள்ள பெட்டியில் உள்ள கழிவறையை ரயில் ஓட்டுனர்கள் பயன்படுத்தும் விதத்தில் போதிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’’என்றார்.

Related Stories: