கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!

சென்னை: அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். ஜூலை 11ம் தேதி ஈபிஎஸ் நடத்திய அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. ஈபிஎஸ் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் கூட்டத்தை கூட்ட வேண்டும் என ஓபிஎஸ், அதிமுகவின் வைரமுத்து தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பளித்தார்.

இந்த தீர்ப்பை வரவேற்று சென்னையில் ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி வீட்டின் முன் பட்டாசுகளுடன் திரண்டிருந்த ஆதரவாளர்கள் ஏமாற்றமடைந்தனர். இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுக பொதுக்குழு தீர்ப்புக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளரை தொண்டர்கள்தான் தேர்வு செய்ய வேண்டும் என எம்.ஜிஆர். வகுத்த விதி காப்பாற்றப்பட்டுள்ளது.

ஜெயலலிதாதான் அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் என நிறைவேற்றப்பட்ட தீர்மானம் காப்பாற்றப்பட்டுள்ளது. அதிமுக தொண்டர்களுக்கு ஜெயலலிதா கொடுத்த மரியாதை நிலைநாட்டப்பட்டுள்ளது. கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது என்று கூறினார்.

Related Stories: