அதிமுக ஆட்சியில் ரூ.49 லட்சம் அம்போ... பங்காருசாமி கண்மாய் சீரமைக்கப்படுமா?: போடி பகுதி விவசாயிகள் எதிர்பார்ப்பு

போடி: போடி-தேனி சாலையில் உள்ள பங்காருசாமி கண்மாயில் தெற்கு மடை உடைந்துள்ளதால், தினந்தோறும் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. எனவே, விவசாயிகளின் நலன்கருதி தெற்கு மடை உடைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளளது. போடிநாயக்கனூர்-தேனி சாலை மெயின் ரோட்டின் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பங்காருசாமி கண்மாய் 90 ஏக்கரளவில் பரந்து விரிந்து இருக்கிறது. இந்த கண்மாய் இடத்தில் 1838ம் ஆண்டு போடியில் அரண்மனை கட்டுவதற்காக அப்போதைய ஜமீன்தார் பங்காருசாமி நாயக்கர் மண் எடுத்து கட்டி முடித்தார்.அந்த இடத்தில் மெகா அளவில் அகன்ற பள்ளம் ஏற்பட்டதால், அதை நிலத்தடி நீர் ஊற்றெடுத்து குடிநீர் சப்ளைக்கும், விவசாயம் பயன்பாட்டிற்காகவும் கண்மாயாக மாற்றி பங்காருசாமி குளம் என பெயர் வைக்கப்பட்டது.போடி நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள மக்கள் விவசாயத்தையே பிரதான தொழிலாக ைவத்துள்ளனர். மேலும் அருகில் உள்ள மலைக்கிராமங்களில் ஏலக்காய், காப்பி, நெல், தென்னை, மா, எலுமிச்சை, இலவு, சப்போட்டா, ஆலை கரும்பு, காய்கறிகள் என விவசாயம் பிரதானமாக நடந்து வருகிறது.இந்த விவசாயத்திற்காக பாசன நீரை சேமித்து வைக்க இந்த பிரமாண்ட பங்காருசாமி கண்மாய்க்கு மேற்கு தொடர்ச்சி மலை கொட்டக்குடி ஆற்றிலிருந்து வரும் காட்டாறு வெள்ளமும், வடக்கு மலைப்பகுதிகளிலிருந்து வரும் மழைநீரை தேக்கி நிலத்தடி நீர்மட்டம் உயர்வதற்கும் வழி வகுக்கப்பட்டது.

ேமலும், போடி மீனாட்சிபுரத்தில் மீனாட்சியம்மன் கண்மாய், போ.மேலசொக்கநாதபுரம் சங்கரப்பநாயக்கர் கண்மாய், போடி வடக்கு மயானச் சாலை மரிமூர் கண் மாய், சிறுகுளம் கண்மாய்களும் உட்பட ஒவ்வொரு கண்மாயும் 100 ஏக்கருக்கு மேல் பரப்பளவு கொண்டவையாக இருக்கிறது. தமிழக கேரளா எல்ைலயில் மலையைச் சுற்றியிருப்பதால் கொட்டக்குடி ஆற்று நீரை இந்த குளங்களில் நிரப்புவதால் தொடர்ந்து 8 மாதங்கள் வரை வற்றாமல் தேங்கி நிற்கும். அதிக பரப்பளவு கொண்ட இந்த பங்காருசாமி கண்மாயில் பெரிய அளவில் நேரடி ஒருபோக நெல் சாகுபடி பாசனத்திற்கு வெளியேற்றுவதற்கு வடக்கு, நடு, தெற்கு என 3 மடைகள் அமைக்கப்பட்டுள்ளன.கண்மாய் நிரம்பி நேரங்களில், நெல் சாகுபடிக்கு நேரடி பாசனத்திற்கு அவ்வப்போது மடைகளின் வாயிலாக அணைக்கரைப்பட்டி, மீனா விலக்கு, துரைச்சாமிபுரம், தோப்புபட்டி போன்ற ஊர்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் இந்த கண்மாயின் மடைகள் சீரமைக்கப்படவில்ைல. இதனால்ல பாசனநீர் முழுமையாக தேக்கிட வழியில்லாமல் தண்ணீர் கசிந்து வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் மடைகள் பலவீனமாகி வருவதால் அதனை ஒட்டி 4 புறமும் சுற்றியுள்ள உயர்ந்த கரைகளும் பலவீனாகி வருகிறது. இதனால் 1 டி.எம்.சி தண்ணீர் முழுக்கொள்ளளவை எட்டும் போது கண்மாய் உடைந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் பெரியகுளம் மஞ்சலாறு அணை பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டி புகார் அளித்தனர். ஆனால் அதிகாரிகள் முழுமையான நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை.இந்நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு குடிமராமத்து பணி திட்டத்தின் கீழ் 49 ரூ.லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நான்கு கரைகளும் மூன்று மடைகளையும் புதுப்பித்து பலப்படுத்திட அரசு உத்தரவிடப்பட்டது. அதன்படி வடக்கு மற்றும் நடு மடைகள் இரண்டையும் உடைத்து கருங்கற்களால் பணிகள் செய்து புதுப்பித்தனர். ஆனால் அது தரமற்று அரைகுறையாகவே பணிகள் நடந்தது.நான்கு புறமும் உள்ள அகன்ற கரைகளை மேலும் மண்கள் கொட்டி சதுரக்கற்கள் பதித்து பலப்படுத்துவதற்கு பதிலாக, பொக்லைன் இயந்திரம் மூலமாக இரு புறங்களிலும் உள்ள மண்ணை சுரண்டி மேலே அள்ளிப்போட்டு, கரைகளையும் கரைத்து பலமில்லாமல் புதுப்பித்தது போல் காட்டி விட்டனர். அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்தாமல் வீணடித்து விட்டனர்.

 இதனால், பங்காருசாமி கண்மாயில் 100 சதவீதம் தண்ணீர் தேங்கி இருந்த நிலையில், தெற்கு மடை உடைப்பால் 50 சதவீத பாசனநீர் தினந்தோறும் வெளியேறிக் கொண்டிருக்கிறது. தொடர்ந்து படிப்படியாக குறைந்து வரும் தண்ணீரால் நிலத்தடிநீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. விரைவில் ஒரு போகம் விளைவிக்கும் நெல்சாகுபடிக்கு பாசனப்பற்றாக்குறை ஏற்படும் என விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.மேலும் கண்மாய்க்குள் கருவேலம் மரங்களும். ஆகாய தாமரைகளாக வளர்ந்து முட்புதர்களாகவும் மாறி பராமரிப்பு இன்றி கிடக்கிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் உடைந்துள்ள தெற்கு மடையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விவசாயிகள் கூறுகையில்: கடந்த அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஏராளமான நீர் நிலைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை. ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலைகளில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்துவிட்டது. அதிலும், இந்த கண்மாயில் குடிமராமத்துப்பணியில் பம்மாத்து வேலை செய்து, மேலும் பலவீனப்படுத்தி ரூ.49 லட்சத்தை பங்குபோட்டு விட்டனர். இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் கண்மாய் உடைந்து தண்ணீர் கிராமங்களுக்குள் புகும் அபாயம் உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை கண்மாயில் உரிய முறையில் குடிமராமத்துப் பணிகள் செய்ய வேண்டும், என்றனர்.

Related Stories: