நெல்லை மாநகர பகுதியில் புழுதி பறக்கும் சாலைகளில் பரிதவிக்கும் வாகன ஓட்டிகள்

நெல்லை: நெல்லை மாநகர பகுதியில் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, நெல்லையப்பர்  கோயில் கீழரதவீதி மற்றும் தெற்கு ரதவீதிகளில் பாதாள சாக்கடை திட்டம்,  குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளில் புழுதி  பறப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். நெல்லை  மாநகர பகுதியில் ஆயிரம் ேகாடி ரூபாய் செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்ட  பணிகள் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. மேலும் நெல்லையப்பர் நெடுஞ்சாலையில் டவுன் ஆர்ச் பகுதியில் இருந்து ஈரடுக்கு  மேம்பாலம் வரை சாலையின் இருபுறத்திலும், நெல்லையப்பர் கோயில்  கீழரத வீதி, தெற்கு ரதவீதி, ஆர்ச் பகுதியில் இருந்து  தெற்கு மவுண்ட் ரோடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் குழாய் பதிக்கவும்,  பாதாள சாக்கடை திட்டத்துக்காக சாலைகள் தோண்டப்பட்டு குழாய்கள்  பதிக்கப்பட்டுள்ளன. இதைதொடர்ந்த சாலைகள் மண்  கொண்டு மூடப்பட்டுள்ளன. இந்த சாலைகளில் நெல்லையில் இருந்து தென்காசி,  செங்கோட்டை, கடையநல்லூர், புளியங்குடி, முக்கூடல் உள்ளிட்ட பகுதிகளுக்கு  அரசு, தனியார் பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும்  இயக்கப்படுகின்றன.

தார் சாலை அமைக்காததால் சாலைகளில் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலைகளில் கனரக வாகனங்கள் செல்லும் போது புழுதி  பறப்பதால் இரு சக்கர வாகன ஓட்டிகளும்  தட்டுதடுமாறி செல்கின்றனர். சில நேரங்களில் கனரக வாகனங்கள் மூலம் விபத்தில்  சிக்கும் நிலையும் காணப்படுகிறது. தற்போது நெல்லை மாநகர பகுதியில்  வெயில் வாட்டிவதைப்பதால் பழுதான சாலைகளில் செல்லும் வாகனங்கள் வரிசை கட்டி ஆமை வேகத்தில் செல்கின்றன. வேகமாக காற்று அடிப்பதாலும் சாலை புகை மண்டலமாக மாறிவிடுகிறது. இதனால் இரு சக்கர  வாகனத்தில் வரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சிக்கி  சுவாச பிரச்சனையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பள்ளிகளுக்கு புத்தம்  புதிய ஆடைகளை அணிந்து வந்தாலும் புழுதியால் உடைகள் அழுக்காகி விடுகின்றன. இரு நாட்களுக்கு ஒருமுறை சீருடைகளை மாற்றிச்செல்லும் மாணவர்கள் தினம் ஒரு சீருடையை பயன்படுத்த வேண்டியதாக பெற்றோர்கள் குற்றம்  சாட்டுகின்றனர். பாதசாரிகளும் புழுதியை கிளப்பும் வாகனங்களால் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம்  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

அரசு பஸ் டிரைவர்கள் புலம்பல்

நெல்லை அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து  தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்கள் நெல்லை  மாநகர பகுதியில் அண்ணா சாலை, ஈரடுக்கு மேம்பாலத்தில் இருந்து டவுன் ஆர்ச்  வரை செல்லும் சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை, தெற்கு மவுண்ட் ரோடு, பேட்டை  கம்பாநதி காமாட்சி அம்மன் கோயில் சாலையில் இருந்து வழுக்குஓடை சாலை,  இதைத்தொடர்ந்து நெல்லை - தென்காசி மாநில நெடுஞ்சாலை, டவுன் சாலை உள்ளிட்ட  சாலைகள் விரிவாக்க பணி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பழுதடைந்துள்ளது. இதனால்  அரசு பஸ்கள் அடிக்கடி பழுதாகின்றன. காலை முதல் இரவு வரை  இயக்கப்பட்டு பணிமனை திரும்பும் போது பஸ்களில் பழுதை சரிசெய்ய  தெரிவிக்கும் போது அதிகாரிகளிடம் பேச்சுக்கு ஆளாக வேண்டி உள்ளதாகவும், தினமும் பஸ்களை கழுவி சுத்தப்படுத்த வேண்டிய நிலை உள்ளது. ஆகவே  சாலைகளை விரைந்து சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர்.

Related Stories: