கூடலூரில் 20 வீடுகளில் திடீர் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

கூடலூர்: கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 20 வது வார்டு நடுகூடலூர் பகுதியில் வீடுகளில் திடீர் விரிசல் ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர். சுமார் இருபதுக்கும் மேற்பட்ட வீடுகளில் இந்த விரிசல் ஏற்பட்டுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் குடியிருக்க முடியாத அளவிற்கு மிகவும் அபாயகரமாக வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் அங்குள்ளவர்கள் அருகில் உள்ள உறவினர்கள் வீட்டிலும் வேறு வீடுகளிலும் தங்கி உள்ளனர். கடந்த இரு தினங்களாக இந்த வெடிப்புகள் ஏற்பட்டு வருவதாகவும் முதலில் லேசாக தோன்றிய வெடிப்புகள் தற்போது மேலும் அதிகரித்து வருவதாகவும் குடியிருப்பு வாசிகள் தெரிவிக்கின்றனர்.    

இதே போல் கூடலூர் ஊட்டி  தேசிய நெடுஞ்சாலையில் தெய்வ மலைப்பகுதியில் சாலையில் நடுவே சுமார் மூன்று நூறு மீட்டர் தூரத்திற்கு வெடிப்பு ஏற்பட்டிருந்ததாகவும், பொக்லைன் இயந்திரம் கொண்டு வெடிப்பு ஏற்பட்ட பகுதிகளில் சீர் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த பத்து நாட்களுக்கும் மேலாக தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை குறைந்து கடந்த இருதினங்களாக வெயில் அடித்து வருகிறது. மழைக்காலத்தில் எந்தவித பிரச்னை இல்லாத நிலையில் மழை நின்று வெயில் தொடங்கியதும் வீடுகள் மற்றும் பூமியில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இப்பகுதியை ஒட்டிய ராஜகோபாலபுரம் பகுதியில் கடந்த பல வருடங்களுக்கு முன் மழைக்காலத்தில் இதே போல் பூமியில் வெடிப்பு ஏற்பட்டதோடு வீடுகளிலும் பிளவு ஏற்பட்டது.

பூமியின் அயில் உள்ள பாறைகளில் நீரோட்டம் அதிகரித்து மழைக்காலத்தில் மண்ணரிப்பு ஏற்பட்டு பின்னர் மழை குறைய தொடங்கியதும் அந்தப் பகுதிகளில் பூமியில் அழுத்தம் காரணமாக வெடிப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சம்பவ பகுதியில் வருவாய் துறை மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஊட்டியில் இருந்து வந்த புவியியல் துறை உதவி இயக்குனர் சரவணன் இப்பகுதியில் ஆய்வு செய்தார். பாதுகாப்பற்ற வீடுகளில் உள்ளவர்கள் தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். மழை நின்றுள்ளதால் ஆபத்துகள் வெகுவாக குறைந்துள்ளது. எனினும் பாதுகாப்பு கருதி வருவாய் துறை சார்பில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இங்குள்ள நிலைமை ஆய்வு செய்து அதற்கு ஏற்றவாறு மற்ற நடவடிக்கை  மேற்கொள்ளப்படும் என கூடலூர் ஆர்டிஓ சரவணகண்ணன், தாசில்தார் சித்தராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.

Related Stories: