திருவாரூர் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுமையாக நீர் நிரப்ப வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

திருவாரூர்: திருவாரூரில் வரலாற்று சிறப்பு மிக்க கமலாலய தெப்ப குளத்தில் முழுவதுமாக நீர் நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. சைவசமய தலங்களில் முதன்மையான தலமாக இருந்து வரும் இக்கோயில் 5 வேலி நிலப்பரப்பினை கொண்டது. இதேபோல் இதற்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் ஆழித்தேரும், 5 வேலி பரப்பளவிலான கமலாலய குளமும் இருந்து வருகிறது.கோயிலின் முக்கிய விழாக்களில் ஒன்றான பங்குனி உத்திர விழாவில் ஆழி தேரோட்ட விழாவும் பின்னர் கமலாலய குளத்தில் தெப்பத்திருவிழாவும் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த குளத்தில் இருந்து வரும் நீரின் அளவை பொறுத்தே நகரின் 4 பகுதிகளிலும் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் இருந்து வருகிறது.

இதுமட்டுமின்றி இந்த குளத்தின் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுவதால் முன்னேர்களுக்கு நிதி கொடுப்பது மற்றும் 16ம் நாள் காரியம் செய்வது போன்ற வற்றிற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடப்பாண்டில் சுட்டெரித்த வெயில் காரணமாக இந்த குளத்தில் இருந்து வந்த பெரும்பாலான நீர் வற்றி நீர்மட்டம் 10 அடிக்கு கீழே குறைந்தது. இதன் காரணமாக சுற்றுபுற பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டமானது குறைந்து வருகிறது. எனவே இந்த கமலாலய குளத்திற்கு நீர் வரும் பாதையான ஓடம்போக்கி ஆற்றிலிருந்து நீர் நிரப்பிட பொது பணி துறையினரும், கோயில் நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களும், பக்தர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: