×

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடும், கடற்கரை ஓரத் தலமும் ஆனது திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். எப்போதும் கடலென பெருங்கூட்டம் முருகனின் தரிசனத்துக்காகத் திரளும் பூமி திருச்செந்தூர் ஆகும். இந்நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி வருகிற 28-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த திருவிழா பக்தர்களின்றி நடைபெற்றது. இந்நிலையில், இந்த ஆண்டு ஆவணி திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு இன்று அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது.

1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்று. காலை 5.30 மணி அளவில் கொடியேற்றம், தொடர்ந்து கொடிமரத்துக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று கொடி ஏற்றப்பட்டது. காலை 10.30 மணிக்கு உச்சி கால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கும் என்று தெரிவித்தனர்.

8-ம் திருவிழா 24-ம் தேதி காலை 10.30 மணிக்கு சுவாமி சண்முகர் பச்சை சாத்திக் கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வருதல் நடக்கிறது என்றும் 10-ம் திருவிழா 26-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது என்றும் அதன் பிறகு  28-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12-ம் திருவிழாவுடன் விழா நிறைவு பெறுகிறது என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

12 நாட்கள் நடைபெறும் மிக முக்கிய நிகழ்ச்சியான ஆகஸ்ட் 26-ம் தேதி ஆவணி திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் மாவட்டம் மற்றும் கோயில் நிர்வாகம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளனர். ஆயிரத்துக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Tags : Aavani festival ,Thiruchendur Subramanian Swami Temple , Avani Festival, Tiruchendur Subramania Swamy Temple, Starts with flag hoisting
× RELATED திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...