×

கலைஞரின் மனச்சாட்சியாக அறியப்படும் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 89வது பிறந்தநாள்: திருவுருவ சிலைக்கு திமுக அமைச்சர்கள் மரியாதை..!!

சென்னை: கலைஞரின் மனச்சாட்சியாக விளங்கியவரும், திமுகவின் மூளையாக செயல்பட்டவரும், ஒன்றிய அமைச்சராக இருந்து அனைவருடைய பாராட்டுதல்களையும் பெற்று மிகச் சிறப்பாக பணியாற்றியவருமாகிய முரசொலி மாறனின் 89வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள முரசொலி மாறன் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, முரசொலி மாறன் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், கே.என்.நேரு, சேகர்பாபு, எ.வ.வேலு, சாமிநாதன் மரியாதை செலுத்தினர். திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தயாநிதி மாறன் எம்.பி., திமுக முன்னணியினர் உள்ளிட்டோரும் முரசொலி மாறன் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

முரசொலி மாறன் வரலாறு:

கலைஞரின் மனசாட்சி என திமுகவினரால் இன்றளவும் நினைவுகூரப்பட்டு வாஞ்சையாக அழைக்கப்படுபவர் முரசொலி மாறன். திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான முரசொலி மாறன், 1934ம் ஆண்டு திருவாரூர் மாவட்டம், திருக்குவளையில் பிறந்தவர் ஆவார். இவரது பெற்றோர் தியாகராஜ சுந்தரம் என இவருக்குப் பெயரிட்டனர்.கலைஞர் கருணாநிதியின் மருமகனான முரசொலி மாறன், சிறுவயது முதலே கருணாநிதியின் புத்தக அலமாரியிலிருந்து பல புத்தகங்களையும் எடுத்து படித்து கருணாநிதியுடன் உரையாடி விவாதித்து வளர்ந்துள்ளார்.

பின்னர், கருணாநிதி ’முரசொலி’ பத்திரிகை நடத்தி வந்தபோது அதில் மேலாளராகவும், எழுத்தாளராகவும் மாறன் என்ற புனை பெயருடன் இயங்கி பின்னாட்களில் முரசொலி மாறனாக அறியப்பட்டார். அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த திராவிட இயக்க ஆய்வாளராகவும் அறியப்பட்டவர் முரசொலி மாறன். மாறனின் மாநில சுயாட்சி குறித்த நூல் இன்றளவும் திராவிட இயக்கத்தின் சிறந்த ஆவணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்திய வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவராக முரசொலி மாறன் இருப்பார் என்றால் அது மிகையல்ல.

Tags : Murasoli Maranan ,Kazha Minister , Artist Manachatshi, Murasoli Maran, Birthday, Ministers
× RELATED கலைஞரின் மனசாட்சி!: முரசொலி மாறனின்...