உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு

உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே அம்மன்கள் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா நேற்று நடைபெற்றது. உத்திரமேரூர் அருகே காக்கநல்லூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கெங்கையம்மன், ஸ்ரீ கருமாரியம்மன், ஸ்ரீ எல்லையம்மன் ஆகிய மூன்று கோயில்கள் ஒன்றிணைந்த கூழ்வார்த்தல் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடைப்பெற்றது. முன்னதாக, நேற்று காலை முன்று அம்மன்களுக்கும் தனித்தனியாக அபிஷேக ஆராதனை நடைப்பெற்றது.

பின்னர், கோயில் வளாகத்தில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து, மூன்று அம்மன்களும் சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். மதியம் கோயில் வளாகத்தில் பக்தர்கள் ஊரணி பெங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.

விரதமிருந்த பக்தர்கள் அலகு குத்திக் கொண்டு அந்தரத்தில் தொங்கியபடியும், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை முதுகில் அலகு குத்திக் கொண்டு இழுத்தும் தங்களது நேத்திக் கடன்களை நிறைவேற்றினர். இதனைத் தெடர்ந்து, மூன்று அம்மன்களும் ஒன்றிணைந்து வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். பக்தர்கள் தேங்காய் உடைத்தும் தீபாராதனை காண்பித்தும் அம்மனை வழிபட்டனர். விழாவையொட்டி கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான காக்கநல்லூர் மற்றும் சுற்றியுள்ள கிராமமக்கள் பலர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

Related Stories: