குண்டும் குழியுமான கிழக்கு கடற்கரை சாலை சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

மாமல்லபுரம்:  மாமல்லபுரத்தில் இருந்து புதுச்சேரி வரை கிழக்கு கடற்கரை சாலை உள்ளது. இச்சாலையை, கடந்த மாதம் வரை தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வந்தது. இதை, தற்போது, ஒன்றிய சாலை மேம்பாட்டு நிறுவனம் பராமரித்து வருகிறது. இந்த சாலை, வழியாக பாண்டிச்சேரி வரையும், பல்வேறு தென் மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் ஏராளமான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், மாமல்லபுரத்திலிருந்து வெங்கப்பாக்கம், சதுரங்கப்பட்டினம், புதுப்பட்டினம், கல்பாக்கம், கூவத்தூர், எல்லையம்மன் கோயில் வழியாக கடப்பாக்கம் வரை தனியார் கல்லூரி வாகனங்கள் மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்வதற்கு அதிகமானோர் வந்து செல்கின்றன. மேலும், மாமல்லபுரம் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பலர் கல்பாக்கத்தில் இயங்கும் அணுமின் நிலையத்திற்கு வேலைக்கு செல்ல, இந்த சாலையை பயன்படுத்தி தான் இருசக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள மணமை தனியார் கல்லூரியிலிருந்து குன்னத்தூர் ஆர்ச் வரை 3 கி.மீக்கு சாலை கடந்த சில வருடமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால், இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன் இருசக்கர வாகனத்தில் செல்வோர் இந்த பகுதியில் செல்லும்போது விரைந்து செல்ல முடியவில்லை. மேலும், அந்த சாலையில் கனரக வாகனங்கள் செல்லும்போது, புழுதி கிளம்புவதால் எதிரில் வாகனங்கள் தெரியாமல் அடிக்கடி நேருக்கு நேர் மோதி விபத்தும் ஏற்படுகிறது. சில நேரங்களில், உயிரிழப்பும் ஏற்படுகிறது. எனவே, இச்சாலையின் முக்கியத்துவம் கருதி சம்மந்தப்பட்ட துறையினர், தலையிட்டு சாலையை சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: