கருத்து கேட்பு கூட்டத்திற்கு அமைச்சர்கள், கலெக்டர் தாமதம்; பொதுமக்கள் வாக்குவாதம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரந்தூர் 2வது சென்னை விமானநிலையம் அமைவதற்கான கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, நேற்று காலை 10 மணிக்கு துவங்க வேண்டிய இந்த கருத்து கேட்பு கூட்டத்திற்கு மதியம் 12 மணியை கடந்தும் தமிழக அமைச்சர்கள், மாவட்ட கலெக்டர் ஆகியோர் வராததாலும், கருத்து கேட்பு கூட்டத்திற்காக கூட்டரங்கில் வைக்கப்பட்ட பேனரும் திடீரென அகற்றப்பட்டு வெளியே எடுத்து சென்றதாலும்,  சுமார் 2மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து  ஆத்திரமடைந்த கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் கடும் கொந்தளிப்படைந்தனர். கூட்டரங்கில் இருந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினரிடம், பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும்  பரபரப்பு ஏற்பட்டது.

கருத்து கேட்பு கூட்டம் தொடர்பான பேனரையும் அகற்றி விட்டு, நீண்ட நேரம் காக்க வைத்ததற்கும், விமான நிலையம் அமைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோசங்களை எழுப்பியவாறு கருத்து கேட்பு கூட்டத்தில் இருந்து கிராமமக்கள் மற்றும் விவசாயிகள் வெளிநடப்பு செய்து அங்கிருந்து கூட்டமாக கிளம்பிச் சென்றனர். காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் வெளிநடப்பு செய்த கிராம மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டும் எவ்வித சமரசமும் அடையாத கிராம மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நாங்கள் புறக்கணிப்பதாக கூறிவிட்டு சென்றனர்.

Related Stories: