காஞ்சிபுரத்தில் கள்ளச்சந்தையில் மதுபான விற்பனை செய்த 4 பேர் கைது; 323 பாட்டில்கள் பறிமுதல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் கள்ளச் சந்தையில் மதுபான விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 323 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்தனர். நாட்டின் 76வது சுதந்திர தின விழாவையொட்டி ஆக.15ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள அரசு மதுபான கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டது. எனவே, காஞ்சிபுரத்தில் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில், காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை ரோட்டு தெருவில் கள்ளசந்தையில் மதுபான விற்பனை நடைபெற்று வருவதாக  சிவகாஞ்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அந்தப் பகுதிக்கு மாறுவேடத்தில் சென்ற போலீசார், மதுபானங்கள் வாங்குவது போல் கேட்டு மது விற்பனையை உறுதி செய்தனர். இதனையெடுத்து, அப்பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை செய்ததில் மழைநீர் வடிகால்களிலும், பூட்டப்பட்டிருந்த வீடுகளிலும் மதுபானங்கள் மூட்டை மூட்டையாய் சாக்கு பைகளில் இருப்பது தெரியவந்தது.

இச்சோதனையில் 4 வீடுகளில் மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து மதுபான விற்பனை நடந்தது  தெரியவந்தது. இதனையெடுத்து அந்த வீடுகளில் இருந்து மொத்தம் 273 மதுபான பாட்டில்கள் கைப்பற்றப்பட்டது. கள்ளச்சந்தையில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட  செல்வகுமார் (26), சுகுமார் (60), விஜயா (60), சித்ரா (40) என தாய் மகன் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, சற்று நேரத்தில் மீண்டும் மதுபான விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே, சிவகாஞ்சி இன்ஸ்பெக்டர் விநாயகம் தலைமையில் நேரில் சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு புதர்களில் சாக்கு பை மற்றும் புத்தக பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கள்ளசந்தையில் மதுபானம் விற்பனை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டும், அதனை சிறிதும் பொருட்படுத்தாது தொடர்ந்து அச்சமின்றி விற்பனையில் ஈடுபட்ட விஷமிளின் செயல் காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: