மாற்று இடம் வழங்க வலியுறுத்தி கோட்டாட்சியர்; அலுவலகத்தை நரிக்குறவர்கள் திடீர் முற்றுகை

பொன்னேரி: மாற்று இடம் வழங்க வலியுறுத்தி நரிக்குறவர்கள் குடும்பத்தினர்  கோட்டாட்சியர் அலுவலகத்தை  முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொன்னேரியில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் சுமார் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் உள்பட 300க்கும் மேற்பட்டவர்கள் வசிக்கின்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்பேரில் 21 நாட்களுக்குள் வீடுகளை அப்புறப்படுத்த நீர்வளத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் உள்ள 317 வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த நரிக்குறவர் இன மக்கள், பேரணியாக கோட்டாட்சியர் அலுவலகம் நோக்கி வந்து முற்றுகையிட்டனர். 50 ஆண்டுகளாக வசித்து வந்த இடத்தில் கல்லூரி வருவதாகக்கூறி அதிகாரிகள் தங்களை ஆற்றங்கரையில் குடியமர்த்தியதாகவும், தற்போது 20 ஆண்டுகள் வசித்து வரும் நிலையில் அந்த இடத்தையும் மீண்டும் காலி செய்யுமாறு அதிகாரிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளதாகவும், வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என்றும் வேதனை தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என நரிக்குறவர்கள் பொன்னேரி கோட்டாட்சியர் காயத்திரியிடம் முறையிட்டனர். இதேபோல் 317 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிய பின்னரே ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என கம்யூனிஸ்ட் கட்சியினர் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக கோட்டாட்சியர் உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: