ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்; அமைச்சர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் 11,637 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை வகித்தார். திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அ.சி.கவுரி ஜெனிபர் அனைவரையும் வரவேற்றார். இதில் எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, ச.சந்திரன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, உதவி ஆணையர் (அமலாக்கம்) ச.சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் பொன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம், முகக்கவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின்பாதுகாப்பு காலணி, கையுறை, ரப்பர் காலணி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களையும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து அமைச்சர் சி.வி.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, `தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தொழிலாளர்களின் கோரிக்கை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளை விரைந்து முடித்திட தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். அதனப்படையில் 90 சதவீத தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகையாக ரூ.18 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருமண நிதி உதவி தொகையாக ரூ.20 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளது மற்றும் ஒரு பெண் ஆட்டோ ஓட்டுநராக இருக்கும் பட்சத்தில் ஆட்டோ வாங்கி கொள்வதற்கு ரூ.1 லட்சம் மானியமாகவும் வழங்கப்படுகிறது. இதுபோன்று இந்த வருடம் 500 பெண் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஆட்டோ வாங்கி கொள்வதற்காக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.5 கோடி நிதி வழங்கப்படவுள்ளது போன்ற பல்வேறு உதவித்தொகைகள், நலத்திட்ட உதவிகள் என இதுவரையில் யாரும் செய்யாத வகையில் தமிழகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு பல்வறு திட்டங்களை தீட்டி அதனை சிறப்பான முறையில் செய்லபடுத்தி வருகிறார்.

அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று கட்டுமானம் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் என 11,637 தொழிலாளர்களுக்கு ரூ.2.10 கோடி மதிப்பீட்டில் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தலைக்கவசம், முகக்கவசம், பாதுகாப்பு காலணி, வெல்டிங் முககவசம், ஜாக்கெட், மின்பாதுகாப்பு காலணி, கையுறை, ரப்பர் காலணி உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுடைய பாதுகாப்பினை கருத்தில் கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை இன்றைக்கு வழங்கியிருக்கிறோம். நமது அரசு பொறுப்பேற்ற இந்த 15 மாத காலத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக வழங்கப்படாமல் இருந்த சுமார் 4 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களின் நலத்திட்டங்களான குறிப்பாக கல்வி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், விபத்து மற்றும் மரணம் போன்றவற்றால் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்த அனைத்து தொகைகளையும் சுமார் ரூ.400 கோடிக்கு மேல் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது,’இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: