நந்திமங்கலம் கிராமத்தில் பழுதடைந்துள்ள பள்ளி கட்டிடம்; நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே நந்திமங்கலம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடம் கட்டிதர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை அருகே பூண்டி ஒன்றியம் நந்திமங்கலம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி 1970ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் தலைமையாசிரியர் உள்பட 2 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் ஒரு ஓடு போட்ட வகுப்பறை கட்டிடம் உள்பட 5 வகுப்பறைகள் உள்ளது. இந்த வகுப்பறை கட்டிடம் சுமார்  52 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. இப்பள்ளி கட்டிடம் மிகவும் பழமையானது.

இதில் ஓடு போட்ட கட்டிடம் மிகவும் பழுதடைந்து சேதமடைந்துள்ளது. மேலும் ஓடு போட்ட கட்டிட வகுப்பறையில் மாணவர்கள் படிக்கும்போது மழைக்காலத்தில் மழைநீர் அவர்கள் மீது விழுகிறது. மேலும் சில நேரங்களில் திடீரென ஓடுகள் மாணவர்கள் மீது விழுகிறது. இதனால் மாணவர்கள் காயமடைகின்றனர். இதனால் கடந்த 2014-2015ம் ஆண்டு ரூ.1.60 லட்சம் செலவில் சீரமைக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு மேலும் ஓடுகள் மாணவர்கள் மீது விழத்தொடங்கியது. இதனால் அச்சத்துடன் மாணவர்கள் படித்து வருகின்றனர். எனவே ஓடு போட்ட பள்ளி வகுப்பறையை அகற்றி விட்டு புதிய பள்ளி கட்டிடம் மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவேண்டும் என பெற்றோர்களும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: