பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் புறக்கணிப்பு அரியவகை முகச்சிதைவு நோயால் சிறுமி பாதிப்பு; அரசு உதவ வேண்டுகோள்

ஆவடி: ஆவடி அருகே முகச்சிதைவு என்ற அரியவகை நோயால் சிறுமி பாதிக்கப்பட்டு அவதிப்பட்டுள்ளாள். இதனால் அவளுக்கு அரசு உதவவேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். ஆவடி வீராபுரம் ஸ்ரீவாரி நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் - சௌபாக்யா தம்பதி. இவர்களுக்கு கடந்த 2012ம் ஆண்டு திருமணமாகி ஒரு மகள், மகன் என 2 குழந்தைகள் உள்ளனர். இவர்களின் மூத்த மகள் டானியா இவருக்கு 9 வயதாகிறது. டானியா வீராபுரம் அரசினர் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறாள். டானியாவும் மூன்றரை வயதிற்கு பின் குழந்தை டானியாவின் முகத்தில் தோன்றிய கரும்பு புள்ளியால் வாழ்க்கை முழுவதுமாக தலைகீழாகவே மாறிவிட்டது.

டானியாவின் முகத்தில் கரும்புள்ளி போன்று தோலில் தோன்றியது. இதனை முதலில் சாதாரண ரத்தக்கட்டு என நினைத்த பெற்றோர் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை. இதனால் டானியாவின் பெற்றோர் கடந்த 6 ஆண்டுகளாக அரசு மருத்துவமனைகள் உள்பட பல்வேறு தனியார் மருத்துவமனைகளை அணுகி தங்களது சக்திகளுக்கு மேலாக கடன் பெற்று செலவு செய்து மருத்துவம் பார்த்துள்ளனர். ஆனால் டானியாவின் முகத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. நாட்கள் போக போக டானியாவின் முகம் வலது கண், கண்ணம், தாடை, உதடு என ஒரு பக்கம் முழுவதும் சிதைய தொடங்கியுள்ளது.

இதனால் குழந்தையின் அழகிய முகம் மிகவும் பாதிப்படைந்தது. இதன் காரணமாக டானியா படிக்கும் பள்ளியில் சக மாணவர்களே அவரை வெறுத்து ஓதுக்கும் வேதனையான சூழலுக்கு ஆளாகியுள்ளார். மேலும் டானியா உடன் படிக்கும் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கி அன்பை புகட்ட வேண்டிய ஆசிரியர்களோ ஒரு படி மேலே சென்று டானியாவை அவருக்குள்ள குறைபாடுகளை காரணம் காட்டி வெறுத்து ஒதுக்கி தனிமைப்படுத்தி உள்ளனர். இது கேட்போரை அதிர்ச்சி அடைய செய்யும் விதமாக உள்ளது. எனவே தமிழக அரசு தங்கள் மகளுக்கு உதவவேண்டும் என பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: