ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்து ரூ.2 கோடி அரசு நிலம் மீட்பு; அதிகாரிகள் நடவடிக்கை

திருவொற்றியூர்: மாத்தூர் பகுதியில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள அரசு நிலத்ைத அதிகாரிகள் மீட்டனர். சென்னை மாநகராட்சி, மணலி மண்டலத்துக்குட்பட்ட மாத்தூர் எம்எம்டிஏ 2வது பிரதான சாலை மற்றும் சின்ன மாத்தூர் சாலையை இணைக்கும் சாலைக்கு நடுவில் அரசுக்கு சொந்தமான 3,684 சதுர அடி நிலம் உள்ளது. இதனை, தனியார் ஒருவர் கடந்த 20 ஆண்டுகளாக ஆக்கிரமித்து அங்கு குடோன் கட்டியிருந்தார். இதனால், பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டது.

எனவே, ஆக்கிரமிப்பிலிருந்து இருந்து இந்த நிலத்தை மீட்டு சாலை அமைக்க வேண்டும், என்று பொதுமக்கள் மணலி மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகத்திடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற மணலி மண்டல குழு கூட்டத்தில் இந்த ஆக்கிரமிப்பை அகற்றுவது குறித்து மண்டல குழு தலைவர் ஏ.வி.ஆறுமுகம் கவுன்சிலர்களின் ஒப்புதலுக்கு முன் வைத்தார். கவுன்சிலர்கள் ஏற்றுக் கொண்டதை அடுத்து இந்த ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதன்படி மாநகராட்சி செயற்பொறியாளர் காமராஜ், உதவி செயற்பொறியாளர் தேவேந்திரன், உதவி பொறியாளர் வெங்கட்ரவி ஆகியோர் நேற்று எம்எம்டிஏ 2வது பிரதான சாலைக்கு வந்தனர். அங்கு சாலை நடுவே தனியார் ஆக்கிரமித்து கட்டியிருந்த இரும்பு குடோனை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றி, அரசு நிலத்தை மீட்டனர். மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.2 கோடி என்றும், இந்த நிலத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக விரைவில் சாலை அமைக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: