ஸ்மார்ட் பார்க்கிங் திட்டத்தை விரிவுபடுத்த சென்னையில் 88 இடங்கள் தேர்வு; போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வளர்ச்சிக்கு ஏற்ப, நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சொந்த தேவைக்காக, 4 சக்கர வாகனங்களை பயன்படுத்துவோர் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் சென்னையில் காலை, மாலை என அவசர நேரங்களில் மட்டுமல்ல எந்த நேரமும் பெருநகரின் சாலைகள் நெரிசலில்தான் சிக்கித் தவிக்கின்றன. இதற்கு சாலையில் ஓடும் வாகனங்கள் மட்டுமல்ல, சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைத்திருக்கும் வாகனங்களும் முக்கிய காரணமாக உள்ளது. சென்னையில் உள்ள பெரும்பாலான வணிக கட்டிடங்கள், சாலையோர கடைகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் முறையான பார்க்கிங் வசதி இல்லாததால், அங்கு வரும் வாகனங்கள் சாலைகளிலும், தெருக்களிலும் தான் நிறுத்தப்படுகின்றன. இவை தவிர வெளியூரில் இருந்து வந்து செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை தனி. குடியிருப்புவாசிகள், மனை முழுவதும் வீடு கட்டிவிட்டு வாகனங்களை தெருவில் நிறுத்துகின்றனர். அங்கு வாடகைக்கு இருப்பவர்களின் வாகனங்களும் உண்டு. அதனால் சென்னையின் பல தெருக்கள் ஒற்றையடி பாதையாக சுருங்கியுள்ளன.

சென்னையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஒவ்வொரு நாளும் புதிதாக சுமார் 3000 வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் சென்னையில் சுமார் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. வாகன பெருக்கம் அதிகரித்த அளவுக்கு, வாகன நிறுத்த வசதி இல்லாததால், அவற்றை சாலையோரங்களில் நிறுத்தும் நிலை நீடிக்கிறது. இதனால், நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. சென்னையில் தனியார் வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், பொழுது போக்கு மையங்கள், திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் பலமடங்கு அதிகம் என்பதால், அவை அமைந்துள்ள பகுதிகளை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. பிரதான சாலைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க, மக்கள் அதிகம்  கூடும் முக்கிய பகுதிகளில், அடுக்குமாடி வாகன நிறுத்தங்களை அமைக்க சென்னை  மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன்படி, தி.நகர் பாண்டிபஜாரில்,  பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்டப்பட்டுள்ளது. இதேபோல், கடந்த 2019ம் ஆண்டு ‘ஸ்மார்ட் பார்க்கிங்’திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில், 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதியாக, 471 சாலைகள் கண்டறியப்பட்டன.

இத்திட்டத்தை செயல்படுத்த, ரூ.7 கோடி ஒதுக்கப்பட்டது. முதற்கட்டமாக, அண்ணாநகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம், தி.நகர், வாலாஜா சாலை உள்ளிட்ட 17 சாலைகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில், 5,532 கார்கள் நிறுத்தவும், 20 சதவீத இடங்களில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தவும், மீதமுள்ள இடங்களில் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், இருசக்கர வாகனம் நிறுத்த, ஒரு மணி நேரத்திற்கு, 5 ரூபாய் மற்றும் கார்களுக்கு, 20 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பொதுமக்கள், ஜி.சி.சி., ஸ்மார்ட் பார்க்கிங்’என்ற செயலி வழியாக, மொபைல் எண், வாகன எண்ணை பதிவேற்றம் செய்து, அருகில் காலியாக உள்ள வாகன நிறுத்தும் இடங்களை கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இத்திட்டம் முழுமை பெறாமல் தொய்வு ஏற்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் இதர துறைகள் ஒத்துழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால், திட்டத்தை முழு வீச்சுடன் செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இத்திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்து, அதை தீவிரமாக செயல்படுத்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

இதன்மூலம் சென்னையில் நிலவும் வாகன நிறுத்த பிரச்னை, போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைப்பதுடன், மாநகராட்சிக்கு வருவாயும் கிடைக்கும். எனவே, போக்குவரத்து நெரிசல் மிக்க முக்கிய இடங்களில் ஆய்வு செய்யப்பட்டது. சாலையோரங்களில் வாகனங்களை கண்ட இடங்களில் நிறுத்துவதால் தான் போக்குவரத்து நெரிசல் பிரச்னை உருவாகிறது. அதுபோன்ற இடங்களை ஆய்வு செய்து அங்கு வாகனங்களை நிறுத்துவதை முறைப்படுத்தினால் மாநகராட்சிக்கு வருமானமும் கிடைக்கும். போக்குவரத்து நெரிசலும் குறையும். இதை கணக்கில் கொண்டு முக்கிய சாலைகளில் சென்னை மாநகராட்சி ஆய்வு நடத்தியது. அதன் அடிப்படையில் 88 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாகன நிறுத்தும் இடங்கள் புதிதாக உருவாக்கப்படுவதால் அப்பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படுவதோடு மாகநராட்சிக்கு வருவாயும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மாநகராட்சியில் வருவாயை அதிகரிக்கவும், வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்து, ஸ்மார்ட் பார்க்கிங் திட்டம் நடைமுறைக்கு வந்தது. கொரோனா உள்ளிட்ட சில காரணங்களால், இத்திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை. தற்போது இத்திட்டத்தை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளை மாநகராட்சி தொடங்கியுள்ளது. கூடுதல் வாகன நிறுத்துமிடங்களை உருவாக்க ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 88 புதிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. வாகனங்களை நிறுத்தும் இடங்களில் தேவையான பார்க்கிங் உதவியாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர். ரசீது வழங்குவதற்காக தேவையான எந்திரங்களும் வழங்கப்பட உள்ளது. ஒட்டுமொத்தமாக பார்க்கிங் பகுதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் தினசரி கட்டண வசூலும் அதிகரித்துள்ளது. ரூ.80 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 20 ஆயிரமாக இந்த கட்டண வசூல் உயர்ந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: