ஆரணி அம்மன் கோயில் திருவிழாவில் பல்டி அடித்து சாகசம் செய்த கபடி வீரர் சாவு: சமூகவலைதளங்களில் வீடியோ வைரல்

ஆரணி: ஆரணி அம்மன் கோயில் திருவிழாவில் பல்டி அடித்து சாகசம் செய்த கபடி வீரர், தலைகுப்புற விழுந்ததில் பரிதாபமாக பலியானார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேடு பகுதியை சேர்ந்தவர் வினோத்குமார் (32), கட்டிட தொழிலாளி. இவர், கபடி குழுவில்  கேப்டனாக இருந்ததுடன், இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தும் வந்தார். கடந்த 7ம் தேதி அங்குள்ள அம்மன் கோயிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடந்தது. இதையொட்டி, அம்மன் திருவீதிஉலா  மேளதாளம், பேண்டு வாத்தியத்துடன் நடந்தது.

இதில், ஏராளமான இளைஞர்கள் ஆட்டம், பாட்டத்துடன் சாகசங்கள் செய்தனர். கபடி வீரர் வினோத்குமாரும் சாலையில் துள்ளி குதித்து, பல்டி அடித்தபடி சாகசம் செய்ய முயன்றார். அப்போது, நிலைதடுமாறி தலைகுப்புற தரையில் விழுந்த வினோத்குமார் மயக்கம் அடைந்தார். அப்பகுதியினர் உடனடியாக அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், வேலூர் அரசு மருத்துவமனையிலும் தொடர்ந்து சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வினோத்குமார் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வினோத்குமாருக்கு சிவகாமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கபடி வீரர் வினோத்குமார், அம்மன் ஊர்வலத்தில் துள்ளி குதித்து, பல்டி அடித்தபோது தலைகுப்புற விழும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: