கோகுல்ராஜ் கொலை வழக்கில் 5 பேர் விடுதலையை எதிர்த்து தாய் அப்பீல் மனு தாக்கல்

மதுரை:சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் கோகுல்ராஜ், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்தது தொடர்பாக கடந்த 23.6.2015ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 15 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். கோகுல்ராஜின் தாய் சித்ரா மனுவையடுத்து வழக்கு, நாமக்கல் நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட 3வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு (வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம்) கடந்த 8.5.2019ல் மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மார்ச் 8ல் தீர்ப்பளித்த மதுரை நீதிமன்றம், யுவராஜ் உட்பட 10 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனையும், 5 பேரை விடுதலை செய்தும் உத்தரவிட்டது. இந்த தண்டனையை எதிர்த்து யுவராஜ் உள்ளிட்ட 10 பேரும் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்தனர். இந்த அப்பீல் மனு விசாரணை நிலுவையில் உள்ளது. இதனிடையே கோகுல்ராஜின் தாய் சித்ரா தாக்கல் செய்துள்ள அப்பீல் மனுவில், ‘‘இந்த கொலை வழக்கில் அனைவருக்கும் தொடர்பு உள்ளது. ஆனால், விசாரணை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்துள்ளது. இது ஏற்புடையதல்ல. அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் மனு மீதான விசாரணையை ஆக. 23க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: