கோயில்களில் திருவிழா நடத்த போலீஸ் அனுமதி தேவையில்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: கோயில் திருவிழாவிற்கு போலீஸ் அனுமதி தேவையில்லை என ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வலையப்பட்டியைச் சேர்ந்த சீனி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எங்கள் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் ஆகஸ்ட் 19 மற்றும் 20ம் தேதிகளில் பொங்கல் திருவிழா நடத்த அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும்’’ என கூறியிருந்தார்.

 இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், ‘‘கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதில், யாருக்கும் எந்தவித பிரச்னையும் இல்லாவிட்டால் போலீஸ் அனுமதி பெற வேண்டியதில்லை. சட்டம் - ஒழுங்கு பிரச்னை இருக்குமானால் தான் அனுமதி பெற வேண்டும். ஸ்பீக்கர்கள் வைக்க, ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு முறையாக அனுமதி பெற்றாலே போதும்’’ என கூறினார்.

பின்னர், ‘‘இந்த மனுவை பொறுத்தவரை, கிராமத்தினர் அனைவரும் சேர்ந்து திருவிழா நடத்துகின்றனர். இதில், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை. எனவே, திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: