பரந்தூரில் புதிய விமானநிலையம் விவசாயிகள், பொதுமக்களின் கருத்துக்களை முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை: கருத்துகேட்பு கூட்டத்தில் அமைச்சர்கள் உறுதி

சென்னை: விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை, முதல்வரிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரந்தூர் விமான நிலைய கருத்துகேட்பு கூட்டத்தில், அமைச்சர்கள்  உறுதியளித்தனர். காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் 12 கிராமங்களை உள்ளடக்கிய பகுதியில் புதிதாக பசுமை விமான நிலையம் அமைய உள்ளது. இதற்கான கருத்து கேட்பு கூட்டம் காஞ்சிபுரம் கலெக்டர் அலுலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்ட அரங்கில் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், எம்எல்ஏக்கள் க.சுந்தர், எழிலரசன், செல்வப்பெருந்தகை, மாவட்ட ஊராட்சி தலைவர் படப்பை மனோகரன், மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் பேசியதாவது:

மங்களாபுரத்தை சேர்ந்த விவசாயி: விமான நிலையம் அமைய உள்ள 12 கிராமங்களும் நன்செய் நிலங்கள் நிறைந்த விவசாய பூமி. விவசாயத்தை நம்பியுள்ள எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, அரசு நிலத்துக்கு சென்ட் ரூ. 3 லட்சமும், வீட்டிற்கு ரூ. 10 லட்சமும் வழங்க வேண்டும். ஏகனாபுரம் முருகன்: விமான நிலைய திட்டத்திற்கு நிலம் எடுத்தால் கண்டிப்பாக வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இந்திரகுமார்: விவசாயத்திற்கு பாதிப்பில்லாத தரிசு நிலங்களை எடுத்துக்கொள்ளலாம்.

பரந்தூர் சங்கர்: 3 தலைமுறைகளாக பரந்தூர் பகுதியில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விமான நிலைய திட்டப் பணிக்கு எந்தெந்த பகுதிகள் கையகப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்து இதுவரை தெளிவாக அறிவிக்கப்படவில்லை. இப்பகுதியில் பல ஏரிகள், குளங்கள், குட்டைகள் மற்றும் நீரோடைகள் உள்ளது. இந்தபகுதியில் விமான நிலையம் அமைப்பதால் பரம்பரையாக வேளாண் தொழில் செய்துவரும் விவசாயிகளின் உயிர்மூச்சை நிறுத்தும் செயல்.

அன்பரசு, நெல்வாய்: மக்களாட்சி நடைபெறுகிறது என்று சொல்கிறோம். ஆனால், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், அவர்கள் பாதிக்கப்படுவதை கணக்கில் கொள்ளாமல் அரசு செயல்படுகிறது. ஒவ்வொரு அமைச்சரிடம் 200 ஏக்கர், 300 ஏக்கர் நிலம் இருக்கிறது. அதனை கையகப்படுத்தி விமான நிலையம் அமைக்கலாம். தமிழரசு, வளத்தூர்: விமான நிலையம் அமைப்பதால் 12 கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நேரு, விவசாயிகள் சங்கம்: பாதிக்கப்படும் பகுதி கிராம மக்கள் வாழும் பகுதிகளில் இந்த கூட்டத்தை நடத்த வேண்டும்.

பட்டாபிராமன்: அரசு முடிவெடுத்தால் ஒன்றும் செய்ய முடியாதுதான், ஆனாலும் எங்களின் ஜீவாதாரத்தை இழக்கும் நாங்கள் எப்படி அமைதியாக இருக்க முடியும். பொதுமக்கள், விவசாயிகளின் கருத்துக்களை கேட்ட பின்பு அமைச்சர்கள் கூறுகையில், விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோரின் கருத்துக்களை கேட்டறிந்தோம். இவற்றை முதல்வரிடம் தெரியபடுத்தி அவரது ஆலோசனையின் பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: