ஜனாதிபதி, துணை ஜனாதிபதிக்கு நேரில் வாழ்த்து தெரிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து அரசின் திட்டங்கள், கூடுதல் நிதி தேவை குறித்து விவாதிக்கிறார்

சென்னை: புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு டெல்லி சென்றார். டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின்போது, தமிழக அரசின் சார்பில் செயல்படுத்த உள்ள பல்வேறு அரசு திட்டங்கள், அதற்கு தேவையான கூடுதல் நிதிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கைககள் அடங்கிய மனுவையும் அளிக்க முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி கடந்த மாதம் 28ம் தேதி சென்னை வந்து, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை மிகச்சிறப்பாக நடத்தி முடித்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டிருந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பல உலக அளவிலான போட்டிகளை நடத்தும் வாய்ப்புகளை தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று  கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு 9.14 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானம் மூலம் டெல்லி சென்றார். அவருடன் முதல்வரின் தனி செயலாளர்கள் மற்றும் உதவியாளர்களும் சென்றனர். நேற்று இரவு முதல்வர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார். இதையடுத்து, டெல்லியில் இன்று காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.

பின்னர், காலை 11.30 மணிக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவிக்கிறார். ஜனாதிபதி, துணை ஜனாதிபதி ஆகிய இருவரும் பதவியேற்ற பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருப்பது இதுவே முதன்முறையாகும். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.30 மணிக்கு பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக நலன் சார்ந்த நல திட்டங்களை செயல்படுத்துவதும் மற்றும் அதற்கு தேவையான கூடுதல் நிதி ஒதுக்குமாறு விரிவான மனு ஒன்றை பிரதமரிடம் கொடுக்கவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

அதே நேரத்தில், தமிழகத்துக்கு தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்று அப்போது அவர் வலியுறுத்துவார் என தெரிகிறது. மேலும், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சில சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி இன்னும் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்துள்ளார். அதேபோன்று நீட் விலக்கு சட்ட மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. அந்த மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்த திட்டமிட்டுள்ளார். இதனால், பிரதமர் மோடியுடனான முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

டெல்லியில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து விட்டு, இன்று இரவு 8 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்னைக்கு இரவு 10.40 மணிக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். முன்னதாக, டெல்லி செல்லும் முதல்வரை வரவேற்க தமிழக எம்பிக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: டெல்லி வாழ் மக்களின் நலனுக்காக உழைத்துவரும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள். எதிர்வரும் ஆண்டு அவருக்கு ஒரு சிறப்பான ஆண்டாக அமையட்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: