ரூ.161.38 கோடி மதிப்பீட்டில் தமிழகத்தில் புதிதாக 16 துணை மின் நிலையங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: ரூ.161.38 கோடி மதிப்பில் தமிழகம் முழுவதும் புதிய 16 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், எரிசக்தித்துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின்தொடரமைப்பு கழகம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில், ரூ.161 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் புதிய துணை மின் நிலையங்களை திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் இறையன்பு, எரிசக்தித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ்சந்த் மீனா, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அந்த வகையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ரூ.147 கோடியே 97 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பதினொன்று புதிய 110 கி.வோ துணை மின் நிலையங்களை தொடங்கி வைத்தார். அதேபோல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ரூ.13 கோடியே 41 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ஐந்து 33 கி.வோ துணை மின் நிலையங்கள் என மொத்தம் ரூ.161 கோடியே 38 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள 16 துணை மின் நிலையங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

மேலும், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருப்பூர், திருச்சி, தூத்துக்குடி, வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 51 துணை மின் நிலையங்களில் 602 எம்.வி.ஏ அளவிற்கு திறன் அதிகரித்து ரூ.97 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள 52 எண்ணிக்கையிலான மின் மாற்றிகளின் செயல்பாட்டினை தொடங்கி வைத்தார்.

Related Stories: