×

பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசை பட்டியல் வெளியீடு: 25ம் தேதி பொது கவுன்சலிங் துவக்கம்

சென்னை: பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கான தர வரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று வெளியிட்டார். இந்த  தரவரிசைப் பட்டியலில் 131 பேர் 200 க்கு 200 கட்ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர். தமிழகத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகள், அரசுப் பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் 2022-2023ம் ஆண்டுக்கு பிஇ, பிடெக் படிப்புகளில்  மாணவ-மாணவியர் சேர்க்கை நடத்த கடந்த ஜூன் 20ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஜூலை 27ம் தேதி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாளாக அறிவிக்கப்பட்டது. கடந்த 2ம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக நேற்று தரவரிசைப் பட்டியலை, சென்னையில் உள்ள தொழில் நுட்ப கல்வி இயக்கக அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

தரவரிசைப் பட்டியலை வெளியிட்டு அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
பிஇ படிக்க மொத்தம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 905 விண்ணப்பங்கள் வந்தன. இது, கடந்த ஆண்டைவிட, 36 ஆயிரத்து 975 விண்ணப்பங்கள் அதிகம். இதில், 1 லட்சத்து 69 ஆயிரத்து 80 பேர் பதிவுக் கட்டணம் செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டைவிட, 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு கூடுதலாக கட்டணம் செலுத்தியுள்ளனர். மேற்கண்ட 1,69,080 பேர் விண்ணப்பங்களில் இருந்து 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 மாணவ, மாணவியரின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்காக அறிவிக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்  22 ஆயிரத்து 587 பேருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. இவர்களில் 12,666 பேர் மாணவர்கள். 9,981 பேர் மாணவியர். இவர்கள் உயர்கல்வியில் சேர்ந்தால், தமிழக முதல்வர் அறிவித்த  மாதம் 1000 ரூபாய் பெறுவார்கள். விளையாட்டு பிரிவின் கீழ்  3,102 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், 1,875 பேருக்கு சான்று சரிபார்ப்பு முடிந்து, 1,258 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் தவிர சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் 970 பேர், மாற்றுத் திறனாளிகள் 203 பேர்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் 20ம் தேதி முதல் தொடங்கும்.

இந்த ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சலிங்கில் 431  பொறியியல் கல்லூரிகள் இடம் பெறுகின்றன. அரசு ஒதுக்கீட்டு  இடங்கள் (65 சதவீதம்) 1 லட்சத்து 48 ஆயிரத்து 811 இடங்கள்.  அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10 ஆயிரத்து 968 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொழில் பாடங்களை எடுத்து படித்தவர்களுக்காக அறிவிக்கப்பட்ட 2 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் 175 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களில் தர வரிசை செய்யும் போது சம வாய்ப்பு உள்ளவர்களுக்கு மூத்தவர் யார் என்பதை தீர்மானிக்கும் முறைகளில் இந்த ஆண்டு சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதால், இந்த ஆண்டு எந்த மாணவருக்கும் சம வாய்ப்பு ஏற்படவில்லை.

இந்த தரவரிசைப் பட்டியல் குறித்த விவரங்கள் www.TNEAonline என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம். பொறியியல் படிப்புக்காக விண்ணப்பித்த மாணவர்களில் பெயர் விடுபட்டு இருந்தால் அவர்கள் இன்று முதல் 19ம் தேதிக்குள்  அந்தந்த மாவட்டங்களில் உள்ள பொறியியல் சேர்க்கை சேவை மையங்களில் நேரில் சென்று தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். அதேபோல, 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை படித்து 7.5 சதவீத  ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்க தவறியவர்களும்  மேற்கண்ட சேவை மையங்கள் மூலம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.

இன்ஜினியரிங் கல்லூரி கலந்தாய்வு 7.5% இட ஒதுக்கீடு
சென்னை, ஆக. 17: பிஇ, பிடெக் தரவரிசைப் பட்டியலின்படி, அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 22587 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அவர்களின் வகுப்பு வாரியான விவரங்கள் வருமாறு: ஓசி பிரிவின் கீழ் 351, பிசி-7226, பிசிஎம்- 521, எம்பிசி-7973, எஸ்சி-4880, எஸ்சிஏ-1344, எஸ்டி- 292.

9,981 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000
உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில், ‘‘அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்காக  அறிவிக்கப்பட்ட 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ்தான் மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெறும். இதன்படி 9,981 அரசு பள்ளி மாணவியர் கலந்தாய்வு முடிந்து பொறியியல் படிப்பில் சேர்ந்தால், தமிழக முதல்வர் அறிவித்த மாதம் 1000 ரூபாய் இவர்கள் பெறுவார்கள். அதுவும் அந்த மாதம் முதலே கிடைக்கும்’’ என்று அமைச்சர் கூறினார்.

Tags : Engineering Admission, Rank List, Public Counseling Commencement
× RELATED நீங்கள் செய்த பாவங்களுக்கு காங்கிரசை...