தெலங்கானாவில் வாகனம், ரயில்கள் நிறுத்தம் இருந்த இடத்தில் 1 நிமிடம் தேசிய கீதம் பாடிய மக்கள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு

திருமலை: தெலங்கானாவில் அரசு அழைப்பு விடுத்த வேண்டுகோளை ஏற்று விவசாயிகள், பொதுமக்கள், அதிகாரிகள் ஒரு நிமிடம் தேசிய கீதம் பாடினர். இதற்காக வாகனங்கள் நிறுத்தப்பட்டன. நாட்டின் 76வது சுதந்திர தினவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு மக்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக, நேற்று  காலை 11.30 மணிக்கு அனைவரும் தாங்கள் இருக்கும் இடத்தில் ஒரு நிமிடம் நின்று தேசிய கீதம் பாடும்படி தெலங்கானா அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஐதராபாத் அபிட்ஸ் ஜிபிஓ. நேரு சிலை அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேடையில் முதல்வர் சந்திரசேகர ராவ், எம்எல்ஏ.க்கள், எம்பி.க்கள், அதிகாரிகள் பங்கேற்றனர். சரியான 11.30க்கு பயணிகள், பொதுமக்கள், வயலில் விவசாயம் செய்தவர்கள் என அவர்கள் இருந்த இடத்தில் இருந்தபடி தேசிய கீதம் பாடினர். இதற்காக, சாலைகளில் சிக்னல்கள் நிறுத்தப்பட்டன. மெட்ரோ ரயில்களும் நிறுத்தப்பட்டன. மாவட்டங்களில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது மக்கள்,  மாணவ மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்று தேசிய கீதம் பாடினர். இந்த வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பாராட்டு குவிகிறது.

Related Stories: