31 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு பீகாரில் நிதிஷ் அரசில் லாலு கட்சி ஆதிக்கம்: காங்கிரசுக்கு 2 பதவி

பாட்னா: பீகாரில் புதிதாக அமைக்கப்பட்ட முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அரசில், 31 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். இதில், 16 பேர் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்தவர்கள். பீகாரில் பாஜ உடனான கூட்டணியை ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் சமீபத்தில்  முறித்துக் கொண்டார். இதனால், அங்கு ஆட்சி கவிழ்ந்தது. பின்னர், ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகளுடன் கூட்டணி வைத்து மீண்டும் புதிய ஆட்சிய அமைத்து முதல்வராக பொறுப்பேற்றார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றார்.

இந்நிலையில், நிதிஷ்குமார் அமைச்சரவை நேற்று விரிவாக்கம் செய்யப்பட்டது. 31 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இதில், ராஷ்டிரிய ஜனதா தளம் ஆதிக்கம் செலுத்தி உள்ளது. இக்கட்சியை சேர்ந்த 16 பேருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்த 11 பேரும், காங்கிரசில் இருந்து 2 பேரும், முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாம் மோர்சாவில் இருந்து ஒருவரும். சுயேச்சை ஒருவரும் அமைச்சராக பதவியேற்றனர். அமைச்சரவையில் 5 இஸ்லாமியர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் உட்பட 7 யாதவர்களுக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

*  நிதிஷ் குமாரிடம் உள்துறை அமைச்சகம், பொது நிர்வாகம், கேபினெட் செயலகம், தேர்தல் மற்றும் மற்றவர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள் உள்ளன.

* துணை முதல்வர் தேஜஸ்வி யாதவுக்கு சுகாதாரம், சாலை கட்டுமானம், நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் மேம்பாடு உள்ளிட்ட துறைகள் வழங்கப்பட்டுள்ளன.

* தேஜஸ்வியின் மூத்த சகோதரர் தேஜ்பிரதாப் யாதவுக்கு சுற்றுச்சூழல் வனம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: