நாட்டை சவால்களுக்கு தயார்படுத்த முன்னோடி முயற்சிகள் செய்தவர் வாஜ்பாய்: பிரதமர் மோடி புகழாரம்

புதுடெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 4ம் ஆண்டு நினைவு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெக்தீப் தன்கர், பிரதமர் மோடி உள்ளிட்டோர், வாஜ்பாய் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தலைவர் ஜேபி நட்டா மற்றும் ஒன்றிய அமைச்சர்களும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புண்ணிய திதியன்று அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினோம்.  இந்தியாவிற்கான அவரது சேவையால் மக்கள் ஈர்க்கப்பட்டதை நினைவு கூர்கிறோம். இந்தியாவை மாற்றுவதற்கும், நமது தேசத்தை சவால்களுக்கு தயார்படுத்துவதற்கும் அவர் முன்னோடியாக முயற்சிகளை மேற்கொண்டார்,’ என்று பதிவிட்டுள்ளார்.

* உலக தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘கொமோரோஸ் அதிபரின் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா தனது வளர்ச்சி பயணத்தில் கொமோரோசுடன் தொடர்ந்து இணைந்து இருக்கும்’ என்று கூறியுள்ளார். இதேபோல், இஸ்ரேல் அதிபர் ஹெர்சாக் இந்தியில் சுதந்திர தின வாழ்த்துகளை டிவிட் செய்திருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பிரதமர்,  ‘வாழ்த்துக்களுக்கு நன்றி, இந்தியா மற்றும் இஸ்ரேல் இடையேயான நட்பு மிகவும் வலுவானது. வரும் நாட்களில் இந்த உறவு மேலும் வலுவடையும்,’ என்று தெரிவித்துள்ளார். இதேபோல், முன்னாள் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வாழ்த்துக்கும் பிரதமர் நன்றி கூறியுள்ளார். நேற்று முன்தினமும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்டோரின் வாழ்த்துக்களுக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்து இருந்தார்.

Related Stories: