காஷ்மீரில் ஆப்பிள் தோட்டத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் பண்டித் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் காஷ்மீர் பண்டித் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது சகோதரர் பலத்த காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளனர். நவ்ஹட்டாவில் கடந்த ஞாயிறன்று போலீசார் ஒருவர் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். பண்டிபோராவில் கடந்த வாரம் புலம் பெயர்ந்த தொழிலாளியை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பத்காம் மற்றும் ஸ்ரீநகரில் கடந்த ஞாயிறன்று 2 கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில், சோபியான் மாவட்டத்தில் உள்ள சோடிபோராவில் ஆப்பிள் தோட்டத்தில் இருந்த பொதுமக்கள் மீது நேற்று தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், காஷ்மீர் பண்டித் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், அவருடைய சகோதரர் பலத்த காயமடைந்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காயமடைந்தவரை மீட்டனர். விசாரணையில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டவர் சுனில் குமார் என்பது தெரிய வந்தது. பண்டித்கள் மீதான தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகமாகி வருவதால், மாநிலத்தை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு போகும்படி பண்டித் சங்கத்தின் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: