போனில் வந்தே மாதரம் சொல்வது கட்டாயமல்ல: மகாராஷ்டிரா அமைச்சர் பல்டி

மும்பை: மகாராஷ்டிரா மாநில கலாசாரத் துறை அமைச்சர் சுதிர் முங்கந்திவர், கடந்த ஞாயிறன்று அளித்த பேட்டியில் `நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி மாநில அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், போனில் வரும் அழைப்புகளை பெறும் போது `ஹலோ’ என்ற வார்த்தைக்கு பதில் `வந்தே மாதரம்’ என கூற வேண்டும். இதை அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதி வரை பின்பற்ற வேண்டும். இதற்கான அரசாணை நாளை வெளியிடப்படும்’ என தெரிவித்தார். இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. இந்நிலையில், டிவி.யில் முங்கந்திவர் நேற்று அளித்த பேட்டியில், ‘அரசு அலுவலகங்களில் போன் அழைப்பை பெறும் அரசு அதிகாரிகள் வந்தே மாதரம் என்று கூறுவது கட்டாயமல்ல. அதற்கு பதிலாக தேசப்பற்றை வலியுறுத்தும் ஒரு வார்த்தை அல்லது வாசகத்தை சொல்லலாம். வந்தே மாதரம் சொல்வது கடந்த 15ம் தேதி சுதந்திர தினத்தன்று தொடங்கப்பட்ட மாநில கலாச்சார அமைச்சகத்தின் பிரசாரம். இது, வரும் ஜனவரி 26ம் தேதி வரை தொடரும்,’ என தெரிவித்தார்.

Related Stories: