×

தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவராக உயர்வதற்கு மு.க.ஸ்டாலினுக்கு பெரிய வாய்ப்பு: திருமாவளவன் பேச்சு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவராக உயர்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது என்று திருமாவளவன் பேசினார். சென்னையில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது மணி விழா நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றி பேசியதாவது: இந்த விழாவில் பங்கேற்று வாழ்த்துவதற்கு இசைவு தந்து வாழ்த்திக் கொண்டிருக்கிற முதல்வருக்கு நன்றியை உரிதாக்குகிறேன்.  திமுக தோன்றிய நாளில் இருந்து பகை சக்திகளால் குறி வைக்கப்பட்டு அதை வீழ்த்த வேண்டும் என்று எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். பெரியாரியத்தை அண்ணா செழுமைப்படுத்தினார் என்றால் பெரியாரியத்தை கலைஞர் வலிமைப்படுத்தினார்.

50 ஆண்டு காலம் தமிழக அரசியலில் தலைப்பு செய்தியாக வந்தவர். திமுக என்கிற ஒரு இயக்கம் இன்றைக்கு உயிர்ப்போடு இருக்கிறது என்று சொன்னால், வலிமையோடு இருக்கிறது என்று சொன்னால், 6வது முறையாக அது மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்று சொன்னால் சனாதன எதிர்ப்பு தான் அதற்கு அடிப்படை காரணம். அதை யாரும் மறுத்துவிட முடியாது. கருத்தியல் தெளிவுள்ளவர்கள் யாரும் இதை மறுத்து பேச மாட்டார்கள். இன்றைக்கு இந்தியா முழுவதும் உங்களை தான் பார்க்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் ஒரே ஒரு மாநிலம் தான் பிற மாநிலங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட மாநிலம். அது தான் தமிழ்நாடு. அவர்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிற முதல்வர் தான் மு.க.ஸ்டாலின்.

இவரது அரசியலை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. குறைத்து மதிப்பிட்டார்கள். அண்ணாவுக்கு பிறகு திமுக இருக்காது என்று கருதினார்கள். கலைஞர் தோன்றினார். கலைஞருக்கு பிறகு அவ்வளவு தான் கட்சி கட்டுப்பாடில்லாமல் போய்விடும். மூத்த தலைவர்கள் இவரை பின்னுக்கு தள்ளவிடுவார்கள் என்றெல்லாம் கணக்கு போட்டார்கள். குறைத்து மதிப்பிட்டவர்கள் இ்ப்போது குரைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் எவரும் எதிர்பார்க்காத வகையில் நீங்கள் இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாதிக்க முடியாத வகையில் அத்தனை கட்சிகளையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டணியை அமைத்தீர்கள்.

காங்கிரசையும், இடது சாரியையும் ஒரே பக்கத்தில் பூட்டினீர்கள். ஒரே அணியில் சேர்த்து சாதித்தது நீங்கள். ஒட்டுமொத்த இந்தியா எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஆபத்து சூழ்ந்து கொண்டிருக்கிறது. பூனை குட்டி வெளியே வந்துவிட்டது. இந்தியாவின் பெயரை மாற்றப் போகிறோம் என்கிறார்கள். நாட்டை எவராலும் காப்பாற்ற முடியாது. எங்கிருந்து எதிர்ப்பு போர் கிளம்பும். ஒரே கதி நீங்கள் தான். துணிச்சலாக இந்தியா முழுவதும் பயனம் செய்யுங்கள். நீங்கள் தமிழ்நாட்டின் தலைவர் மட்டுமல்ல தேசிய தலைவராக உயர்வதற்கு மிகப் பெரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. நாங்கள் உங்களோடு உற்ற துணையிருப்போம்.  இவ்வாறு அவர் பேசினார்.

Tags : M.K.Stalin ,Tamil Nadu ,Thirumavalavan , Big chance for M.K.Stalin to rise not only as the leader of Tamil Nadu but also as national leader: Thirumavalavan speech
× RELATED பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம்...