மீனவர்கள் போராட்டம் பணிந்தது அதானி குழுமம்: விழிஞ்ஞம் துறைமுக பணி நிறுத்தம்

திருவனந்தபுரம்: மீனவர்கள் போராட்டம் தீவிரமானதால், விழிஞ்ஞம்  துறைமுகப் பணிகளை நிறுத்துவதாக அதானி குழுமம்  தெரிவித்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள விழிஞ்ஞத்தில் வர்த்தக துறைமுகம் கட்டுமான பணிகளை சில வருடங்களுக்கு முன் அதானி குழுமம் தொடங்கியது. தற்போது, அது இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இத்திட்டம் தொடங்கிய போதே தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக விழிஞ்ஞம் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், எதிர்ப்பையும் மீறி பணிகள் நடைபெற்றன.

இந்நிலையில், திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள் துறைமுகத்திற்கு எதிரான போராட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்தி உள்ளனர். ‘விழிஞ்ஞம் துறைமுகப் பணிகளால் கடலோர கிராமங்களில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால் உரிய இழப்பீடு தர வேண்டும்,’ என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் தலைமைச் செயலகம் முன் படகுகளுடன் திரண்டு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், நேற்றும் துறைமுகத்திற்கு செல்லும் முக்கிய சாலையில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் மறியல் செய்தனர். துறைமுக பணிக்கான பொருட்களை எடுத்து செல்வதை தடுத்தனர். இதையடுத்து,  துறைமுகப் பணிகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

* மீனவர்கள் அல்ல

கேரள துறைமுக பொறுப்பு அமைச்சர் அகமது தேவர் கோவில் கூறுகையில், ‘மீனவர்களுக்கான மறுவாழ்வுத் திட்டங்கள் குறித்து ஏற்கனவே அரசு தெரிவித்துள்ளது. இந்தப் போராட்டம் தேவையில்லாதது. வெளியில் இருந்து வந்தவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இது தொடர்பாக மீனவர்களுடன் மீண்டும் பேச்சு நடத்தத் தயார்,’ என்றார்.

Related Stories: