காஷ்மீரில் பேருந்து கவிழ்ந்து இந்தோ-திபெத் படை வீரர்கள் 7 பேர் பலி: 6 பேர் கவலைக்கிடம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ஒரு மாதத்துக்கும் மேலாக நடந்த அமர்நாத் யாத்திரை பாதுகாப்பு பணியில் இந்தோ-திபெத் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஈடுபட்டனர். இவர்களின் பாதுகாப்பு பணி கடந்த 11ம் தேதியுடன் முடிந்த நிலையில், இந்த துணை ராணுவ வீரர்கள் பேருந்தில் முகாமுக்கு நேற்று திரும்பிக் கொண்டு இருந்தனர். இதில் 39 பேர் பயணம் செய்தனர். பாகல்காம் பகுதியில் பேருந்து வந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் உருண்டு ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 2 வீரர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். தகவல் அறிந்து விரைந்த மீட்பு குழுவினர், விபத்தில் சிக்கிய வீரர்களை மீட்டனர். அவர்கள் ஹெலிகாப்டர் மூலமாக ஸ்ரீநகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மேலும் 5 வீரர்கள் உயிரிழந்தனர். 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இறந்தவர்களுக்கு ஜனாதிபதி முர்மு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related Stories: