பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு எது? தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம்

புதுடெல்லி: பொதுமக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் இந்தியாவின் நம்பகமான அமைப்பு அல்லது நிறுவனங்களின் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் தேர்தல் ஆணையத்திற்கு 9வது இடம் கிடைத்துள்ளது. ‘இப்சோஸ் இந்தியா’ என்ற நிறுவனம் நாடு முழுவதும் நான்கு பெருநகரங்கள், அதற்கு அடுத்த நிலையில் உள்ள நகரங்கள், சிறு நகரங்கள், கிராமங்களில் இந்தியாவில் மிகவும் நம்பகமான நிறுவனங்கள் குறித்த ஆய்வுகளை பொதுமக்களிடம் நடத்தியது.

அதன் விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி, இந்தியாவின் பாதுகாப்புப் படைகள், இந்திய ரிசர்வ் வங்கி, பிரதமர் அலுவலகம் ஆகியவை மிகவும் நம்பகத்தன்மைக்கான முதல் மூன்று நிறுவனங்களாக உள்ளன. நான்காவது இடத்தை உச்ச நீதிமன்றம் பிடித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) ஐந்தாவது இடத்தையும், நாடாளுமன்றம் ஏழாவது இடத்தையும், ஊடகங்கள் எட்டாவது இடத்தையும், தேர்தல் ஆணையம் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளன.

மக்களின் நம்பிக்கையைப் பெறுவதில் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சிகளும் பின்தங்கியுள்ளன. மதத் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைவாக இருப்பதாக கணக்கெடுப்பு காட்டுகிறது. ஒரு நபர் அல்லது நிறுவனத்தின் நம்பிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் ஒழுக்கம் மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு நிறுவனத்திற்கும் நம்பிக்கையே அடித்தளம் என்பதையும் கணக்கெடுப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories: