×

திருமங்கலம் பிரபல மாலில் உள்ள ஓட்டலில் வாங்கிய சோளாபூரியில் புழு கிடந்ததால் பெண் அதிர்ச்சி

அண்ணாநகர்: திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் வாங்கிய சோளா பூரியில் புழுக்கள் கிடந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்தவர் ராணி(35). இவர் நேற்றிரவு தனது மகனுடன் திருமங்கலத்தில் உள்ள பிரபல மாலில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் அங்கு தனது மகனுக்கு சோளா பூரி ஆர்டர் செய்தார். சற்று நேரத்தில் சப்ளையர் சோளா பூரியை கொண்டுவந்து கொடுத்தபோது கடும் துர்நாற்றம் வீசியுள்ளது.

இதனால் அவற்றை சோதனை செய்தபோது அதில் 5 க்கும் மேற்பட்ட புழுக்களும் பூச்சிகளும் நெளிந்துகொண்டிருப்பது பார்த்து ராணி கடும் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில் அளிக்காததுடன் பெண்ணை மிரட்டியதாக தெரிகிறது. இதுபற்றி ராணி, சென்னை காவல்கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். திருமங்கலம் போலீசார் வந்து ராணியிடம் விசாரணை நடத்தினர். அப்போது தான் வாங்கிய சோளா பூரியில் இருந்த புழுக்களை போலீசாரிடம் காண்பித்தார்.  இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு போலீசார் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுந்தரமூர்த்தி வந்து ஆய்வு செய்தார்.

 சோளா பூரிக்கு பிசைந்து வைத்திருந்த மாவில் அதிகப்படியான புழுக்கள் இருந்ததாகவும் மாவு கெட்டுப் போனதில் புலித்த வாடை அடித்ததாகவும் தெரிகிறது. இதையடுத்து ஓட்டலில் உள்ள சமையல் அறை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுசம்பந்தமாக விளக்கம் அளிக்கும்படி அந்த ஓட்டலுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர். தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லக்கூடிய பிரபல மாலில் உள்ள உணவகத்தில் சோளா பூரியில் புழுக்கள் கிடந்தது வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. “உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Solapuri ,Thirumangalam Famous Mall , Woman shocked to find maggots in cholapuri she bought at a restaurant in a popular mall in Tirumangalam
× RELATED சீல் வைத்த அதிகாரிக்கு மிரட்டல்...