சென்னையில் இருந்து சென்று ஈரோட்டில் தலைமுடி கொள்ளை: சென்னையில் பதுங்கிய இருவர் கைது

ஈரோடு: கர்நாடகா மநிலத்தில் உள்ள கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் முடியை ஏலத்தில் எடுத்த ஈரோடு வியாபாரிடமிருந்து சென்னையை சேர்ந்தவர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூ.7 லட்சம் மதிப்பிலான முடியை கொள்ளையடித்துள்ளனர். ஏலம் எடுப்பதில் இருந்த போட்டியில் முந்தி கொண்ட ஈரோடு வியாபாரிடமிருந்து சென்னை வியாபாரிகள் முடியை கொள்ளையடித்தனர்.

ஈரோடு திண்டல் மாருதி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். கோவில்களில் காணிக்கையாக செலுத்தப்படும் தலைமுடிகளை வாங்கி சவுரி முடிகள், டோப்பா முடிகள்  வியாபாரம் செய்து வருகிறார். கடந்த மாதம் கர்நாடகா மாநிலம் நஞ்சன்கூடு சிவன் கோவிலுக்கு சென்று ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்துள்ளார். இந்நிலையில் சுதாகரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் தனக்கு தலைமுடி தேவை என்றும் நேரில் பார்க்க வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனால் சுதாகர் தனது வீட்டின் முகவரியை தெரிவித்ததால் அந்த நபர் அவர் வீட்டிற்கு வந்து தலை முடியை பார்த்து விட்டு தனது முதலாளியிடம் சென்று தகவல் தெரிவித்து வாங்கி கொள்வதாக  கூறி சென்றிருக்கிறார். சிறிது நேரத்தில் மூன்று நபர்களுடன் சுதாகரின் வீட்டிற்கு சென்ற அந்த நபர் கத்தியை காட்டி  மிரட்டி சுதாகர் மற்றும் அவரது மனைவி இரண்டு மகன்களையும் வீட்டில் ஒரு அறையில் பூட்டி வைத்துள்ளார். பின்னர் 7 மூட்டைகளை வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான தலைமுடியை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து சுதாகர் ஈரோடு வீரபஞ்சத்திரம் போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் தலைமுடியை கொள்ளையடித்து சென்றவர்கள் சென்னையில் பதுங்கி இருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து சென்னை வந்த ஈரோடு போலீசார்  தலைமுடி கொள்ளையில் ஈடுபட்ட அம்பத்தூரைச் சேர்ந்த பொன்முருகன் மற்றும் செங்குன்றம் பகுதியை சேர்ந்த பாபா முருகன் இருவரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். முடியை ஏலம் எடுப்பதில் முந்தி கொண்ட சுதாகரிடம் இருந்து பொன்முருகன் கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதா அல்லது வேறு ஏதேனும்  கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில் கொள்ளையடித்து சென்றனரா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: