சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை: சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவருக்கு 2 வாரங்களில் சான்றிதழ் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மேற்கு அண்ணாநகரை சேர்ந்தவர் மனோஜ். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில்,  தான் காதலித்து திருமணம் செய்துக் கொண்டதாகவும், தனது மனைவியும், தானும் வேறு சாதியை சேர்ந்தவர் என்றும் தெரிவித்துள்ளார். தங்களுக்கு பிறந்த மகன் யுவன் மனோஜை வரும் அக்டோபர் மாதம் பள்ளியில் சேர்க்க உள்ளதால் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் கோரி அம்பத்தூர் தாசில்தாரிடம் விண்ணப்பித்துள்ளதாகவும், ஆனால் அம்பத்தூர் தாசில்தார் உரிய சான்றிதழ் வழங்கவில்லை என்றும் உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதுபோன்று ஒருசில இடங்களில் சாதி, மதம் இல்லை என்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான செய்திகள் உள்ளதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்துஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் சம்பந்தப்பட்ட தாசில்தார் சார்பில் அரசு உத்தரவு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ள விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உரிய சான்றிதழ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு 2 வாரத்திற்குள் சாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related Stories: