கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேர் விடுதலை: மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

காந்திநகர்: குஜராத்தில் கர்ப்பிணியை கூட்டு பாலியல் தொல்லை செய்த கைதிகள் 11 பேரை விடுதலை செய்ததையடுத்து மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கியது. விடுதலை பெற்ற இந்தியாவில் மிக மோசமான கலவரம் அந்தாண்டில் சிறுபான்மை முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்டதாகும். இதில், தாகோடு மாவட்டம் ராந்திப்பூர் கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய பெண்ணான பில்கீஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அவரது குடும்பத்தினர் 7 பேரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள 11 பேரை குஜராத் மாநில அரசு முன்கூட்டியே விடுவிக்கும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்துள்ளது.

2000 பேருக்கு மேல் கொல்லப்பட்டதாக கருதப்படும் கலவரத்தில் 5 மாத கர்ப்பிணியை பாலியல் வன்கொடுமை செய்த 11 பேருக்கு விடுதலை அளிக்கும் குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் பலரும் கண்டனம் மற்றும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜிவஹிருல்லா கூறுகையில், இச்சம்பவம் உலகின் பார்வையில் இந்தியாவை தலைகுனிய வைத்தது. பாலியல் வழக்கில் தொடர்புடைய 11 பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை  விதித்தது. தற்போது சிறையில் இருந்த 11 பேரையும் குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது.

சுதந்திர தினத்தில் பெண்களின் கண்ணியம் காக்க வேண்டும், அவமதிக்கக்கூடாது என பிரதமர் பேசி ஒரு நாள் கூட முடியவில்லை. பெண்களின் கண்ணியம், உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே ஒன்றிய அரசு உடன்பட்டிருப்பது கவலைக்குரியது என தெரிவித்தார். இவ்வழக்கை விட குறைவான குற்றத்தை செய்த ஏராளமான குற்றவாளிகள் இன்றும் குஜராத் சிறையில் வாடுகின்றனர். 20 ஆண்டுக்கும் மேல் சிறையில் உள்ள 6 தமிழர்கள் உள்பட அனைவருக்கும் தண்டனை குறைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கவும், முஸ்லீம் சிறைவாசிகளின் தண்டனையை குறைத்து விடுதலை செய்வதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Related Stories: