பசுமை வளர்க்கும் விதமாக மலைப்பகுதியில் விதைப்பந்து தூவிய மாணவ, மாணவிகள்

நாமக்கல் : நாமக்கல் அருகே தொடர்ந்து 5வது ஆண்டாக அரசு பள்ளி மாணவ, மாணவியர் ஆசிரியர்களின் துணையுடன் மலைப்பகுதியில் விதைப்பந்து வீசி பசுமை மரங்களை வளர்த்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி ஒன்றியத்தில் உள்ள மலைப்பட்டி கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளியின் தலைமை ஆசிரியையாக தமிழரசி, ஆசிரியராக நல்லமுத்து ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இப்பகுதி வறண்ட மலைப்பகுதியாகும்.

இந்த பகுதியை பசுமை காடுகளாக மாற்றும் முயற்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2018ம் ஆண்டு முதன் முதலாக சுதந்திர தினத்தன்று விதை பந்துகளை வீசி பணியை தொடங்கினர். களி மற்றும் செம்மண்களில் விதைகளை வைத்து உருண்டையாகி வீசும் முயற்சியில் குழந்தைகளுடன் ஆசிரியர்கள் ஈடுபட தொடங்கினர்.

நேற்று நாடு முழுவதும் சுதந்திர தின அமுத பெருவிழா கொண்டாடபட்டது. 5ம் ஆண்டாக மலைப்பட்டி பள்ளி குழந்தைகளுடன் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் மலைப்பகுதிக்கு சென்று விதைப்பந்துகளை நீரோடை மற்றும் காட்டு பகுதிகளில் வீசினர். ஆல, வேம்பு, புளி மற்றும் புங்க மர விதைப்பந்துகளில் வைத்து குழந்தைகள் வீசினர். ஆண்டுக்கு 2 ஆயிரம் விதைப்பந்துகள் வீசி பசுமையை ஏற்படுத்தி வருவதாக ஆசிரியர்கள், பெற்றோர்கள் தெரிவித்தனர். சிறு வயதிலே மரம் வளர்ப்பு குறித்தும் இயற்கையை நேசிக்கும் பழக்கத்தை குழந்தைகளில் மனதில் பதியவைத்து வருவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Related Stories: